கருணாநிதி ஆட்சியில் பிறக்கும் குழந்தைக்கு கூட கடன்பாக்கி

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      அரசியல்
vellore

 

வேலூர், பிப்.25 - தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில், பிறக்கும் குழந்தைக்கு கூட ரூ.15 ஆயிரம் கடன் பாக்கி உள்ளது என்று வேலூரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஆதிராஜாராம் பேசினார்.வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் பல கோடி ரூபாய் நிலம் ஆக்கிரமிப்பு ஊழல், சத்துவாச்சாரி தி.மு.க. நகராட்சி நூதன ஊழல் ஆகியவற்றைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். 

வேலூர்  மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர் ஆதிராஜாராம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் நாளை பிறக்கும் குழந்தைக்கு கூட ரூ.15 ஆயிரம் கடன் உள்ளது. இன்றைக்கு தமிழ்நாட்டில்  நடைபெறும் ஆட்சி பகல் கொள்ளை ஆட்சி. தற்போது பிரியா விடை ஆட்சியாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டை கூறு போட்டு கருணாநிதி குடும்பம் விற்பனை செய்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார். அந்தப் பணத்தில் மத்திய அரசின் 1 வருட பட்ஜெட் போடலாம். அந்த அளவுக்கு கருணாநிதி குடும்பத்தினர் கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளை அடிப்பதை மறைப்பதற்காக ஜாதி பெயரை சொல்லி பொதுமக்களை ஏமாற்றுகிறார். ஊழலை மறைப்பதற்கு ஆரியர்-திராவிடர் என கூறி வருகிறார். ராஜீவ்காந்தி கொலையில் தி.மு.க.வுக்கு பங்கு உள்ளது. விசாரணை நடத்தச் சொல்லி உத்தரவிட்டு உள்ளார்கள். ஊழலை மறைப்பதற்காகவும், ஜாதி பெயரை பயன்படுத்துகிறார். தமிழ்நாட்டில் காவல்துறையின் கை கட்டப் பட்டு உள்ளது. விலைவாசி விஷம் போல் ஏறி உள்ளது. இதைத் தடுக்க கருணாநிதியால் முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சத்துவாச்சாரி ஒன்றிய செயலாளர் சுந்தரம், இணை செயலாளர் ஆர்.பி.ரமேஷ், பொருளாளர் ராஜேந்திரன், டாக்டர் விஜய், முன்னாள் மாவட்ட செயலாளர் நீலகண்டன், மூர்த்தி, வாசு, ஒன்றிய செயலாளர் கர்ணல், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த பெல் தமிழரசன், வேலூர் மாநகர கவுன்சிலர் ஜி.ஜி.ரவி, கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நாராயணன், ம.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் ந.சுப்பிரமணி, நகர செயலாளர் பழனி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.ஏ.டி.சி. குணசேகரன், வீட்டுவசதி வாரியம் குருசாமி, நகர எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் எஸ்.வில்வநாதன், மற்றும் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: