முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவிழ்ந்தது கொல்கத்தா: பதுங்கிப் பாய்ந்த ராஜஸ்தான்

திங்கட்கிழமை, 5 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

அகமதாபாத், மே 6 - கொலகத்தாவுக்கு எதிராக அகமதாபாதில் நடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீண் டாம்பே இந்த ஐபிஎல் தொடரின் முதல் ஹாட்ரிக்கை எடுத்தார்.

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் காம்பீர், பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தானின் துவக்க இணையான நாயர் மற்றும் ரஹானே, சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். 6 ஓவர்களில் அந்த அணி 50 ரன்களைக் கடக்க, 7-வது ஓவரில் ரஹானே 30 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.அடுத்து நாயருடன் இணைந்த சாம்சன் ரன் சேர்ப்பைத் தொடர்ந்தார். 13-வது ஓவரிலேயே 100 ரன்களை ராஜஸ்தான் தாண்டியது. நாயர், 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரை சத வாய்ப்பை இழந்தார். அடுத்த வந்த வாட்சனும் அதிரடியை விடவில்லை. அவர் பங்கிற்கு வேகமாக ரன் சேர்க்க முயற்சித்தார். சாம்சன் 31 பந்துகளில் 37 ரன்களுக்கும், வாட்சன் 20 பந்துகளில் 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 20-வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கடைசி பந்தில் பாடியா அடித்த சிக்ஸரால் 20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. 

171 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டக் களமிறங்கிய உத்தப்பா, காம்பீர் இணை ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை அனாயாசமாக எதிர்கொண்டது. 14 ஓவர்களில் 121 ரன்களை குவித்த இந்த இணை, கொல்கத்தாவை வெற்றிக்கு அருகில் எடுத்துச் சென்றது. ஆனால், வாட்சன் வீசிய 15-வது ஓவரில், காம்பீர் 54 ரன்களுக்கும், உத்தப்பா 65 ரன்களுக்கும், ரஸ்ஸல் 1 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 16-வது ஓவரை வீச வந்த சுழற்பந்து வீச்சாளர் பிரவீண் டாம்பே, கொல்கத்தா அணிக்கு அடுத்த அதிர்ச்சியைத் தந்தார். தனது முதல் பந்தில் மனீஷ் பாண்டேவையும், 2-வது பந்தில் யூசுப் பதானையும், அடுத்த பந்தில் டோஷ்சாட்டையும் வீழ்த்தி, இந்த ஐபிஎல் தொடரின் முதல் ஹாட்ரிக்கை எடுத்தார். இதனால் 14-வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்திருந்த கொல்கத்தா அணி, 16-வது ஓவரின் முடிவில் 126 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

தொடர்ந்து போராடிய ஷகிப் அல் ஹசன், சவுத்தி வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 15 ரன்கள் எடுத்து, மீண்டும் கொல்கத்தாவுக்கான வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார். 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் கொல்கத்தா அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளுக்கு 160 ரன்கள் என்று தனது இன்னிங்ஸை முடிந்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்