முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் வழக்கு: புதிய வாக்குமூலம் அளித்தார் பல்வா!

செவ்வாய்க்கிழமை, 13 மே 2014      வர்த்தகம்
Image Unavailable

 

புது டெல்லி, மே 14 - ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் நீதிபதியின் கடும் எச்சரிக்கையால் ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குனர் சாகித் பல்வா புதிய வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் குறித்த முடிவை 16 ந்தேதிக்கு ஒத்திவைத்து சி.பி.ஐ. தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., உள்ளிட்ட 14 பேர், மற்றும் ரிலையன்ஸ், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் ஆகிய மூன்று நிறுவனங்களின் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது.அதன்படி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., சரத்குமார், யுனிடெக் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா உள்ளிட்டோர், நீதிபதி ஒ.பி.சைனி முன்பு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். அவர்களை தொடர்ந்து ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட், சினியூக் பிலிம்ஸ் மேம்பாட்டாளர் கரீம் மொரானி, யுனிடெக் ஒயர்லெஸ் (தமிழ்நாடு) நிறுவனம் சார்பில் பங்கஜ் பாத்வா உள்ளிட்டோரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குனர் சாகித் உஸ்மான் பல்வா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வேண்டுகோளை நீதிபதி சைனி ஏற்றுக்கொண்டார்.இதன்படி சாகித் பல்வா தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தில் சில எழுத்துப்பிழைகள் இருந்தது. எனவே அவற்றை சரிசெய்து மீண்டும் தாக்கல் செய்யும்படி நீதிபதி சைனி உத்தரவிட்டார்.ஆனால் அவர் மீண்டும் தாக்கல் செய்த பதில்களும் தெளிவாக இல்லை. 

இதைத்தொடர்ந்து, அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் நடைமுறைகள் கடந்த 10 ந்தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது பல்வா, தன்னிடம் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் புரியவில்லை என்றும், வேறு வடிவில் அந்த கேள்விகளை கேட்க முடியுமா? என்றும் மீண்டும் கோரினார்.பல்வாவின் இந்த செயல் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறிய சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞர் யு.யு.லலித், அவரின் இந்த செயலுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் நீதிமன்ற விசாரணையை தாமதப்படுத்த முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.பல்வாவின் நடவடிக்கைகளால் கோபமடைந்த நீதிபதி, அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு என்று கூறிய அவர், நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தால் சிறை செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தார். இதற்கு சாகித் பல்வா மற்றும் வழக்கறிஞர் விஜய் அகர்வால் ஆகியோர் மன்னிப்பு கோரினர்.பின்னர் இதன் மீதான முடிவை 12-ந்தேதி அறிவிப்பதாக கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். இந்தநிலையில் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை மீண்டும் நடைபெற்றது. அப்போது ரிலையன்ஸ் நிறுவன நிர்வாகிகள் கவுதம் தோஷி மற்றும் நிதின் அகர்வால் ஆகியோர் எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அப்போது, சாகித் உஸ்மான் பல்வா சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் மஜித் மேமன், சாகித் பல்வா சார்பில் மீண்டும் மன்னிப்பு கோரினார். மேலும், திருத்தப்பட்ட வாக்குமூலத்தை சாகித் பல்வா தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து சாகித் பல்வாவின் வாக்குமூலம் குறித்து வருகிற 16-ந்தேதி முடிவு செய்யப்படும் என்று கூறி, விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!