முக்கிய செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட புதிய மாவட்ட கலெக்டராக வி.அருண்ராய் பொறுப்பேற்றார்

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் ஜூன் - 6-  ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக வி.அருண்ராய் நேற்று(05.06.11) பொறுப்பேற்றார். இவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன் பொறுப்புக் களை ஒப்படைத்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் 2003ம் ஆண்டு 

இந்திய ஆட்சிப்பணியில் பதவியில் சேர்ந்து உதவி பயிற்சி ஆட்சியராக தூத்துக்குடி மாவட்டத்திலும், சார் ஆட்சியராக சிதம்பரத்திலும், அரசு நிதித்துறை(பட்ஜெட்) துணைச்செயலாளராக சென்னையிலும் பணியாற்றி, 14.06.10 முதல் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றி, தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவர் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்ததாவது,

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அரசின் மக்கள் நலத்திட்டங்கள், இலவசத் திட்டங்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் பள்ளி மாணவ- மாணவியர்கள், முதியோர் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக திகழ்வதால், சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் மேம்படுத்தப்பட்டு 

சிறப்பாக செயல்படுத்தப்படும். ராமேஸ்வரத்தில் பாலித்தீன் ஒழிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு இன்றி போக்குவரத்துகள் சரிசெய்யப்படும்.ராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி சுற்றுலா மேம்பாட்டுக்கு ஆவண செய்யப்படும்.ராமநாதபுரம் நகர் பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொன்னையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ் மற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: