முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் - 7 - ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்ட யோகா குரு பாபா ராம் தேவை, ராம்லீலா மைதானத்திலிருந்து வெளியேற்றியது குறித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கறுப்பு பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். ஆனால் கடந்த 5 ம் தேதி நள்ளிரவு அவர் அங்கிருந்து டெல்லி போலீசாரால் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு  தானாகவே முன்வந்து இது தொடர்பாக ஒரு  வழக்கை பதிவு  செய்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ஸ்வத்தேந்தர்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்  இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் டெல்லி மாநிலத்தின் தலைமை செயலர், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ராம்தேவை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது ஏன் ? என்பதற்கு 2 வார காலத்திற்குள்  உரிய பதிலை அளிக்கும்படி இந்த நோட்டீசில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம் இருந்த ராம்தேவையும் அவரது  ஆதரவாளர்களையும் நள்ளிரவு  நேரத்தில் வெளியேற்றியதற்கான காரணம் சூழ்நிலை ஆகியன  குறித்து  விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிறகு இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வருகிற ஜூலை மாதம் இரண்டாவது வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
என்றாலும் இந்த விவகாரம் தொடர்பாக அஜய்  அகர்வால் என்ற வக்கீல்  தாக்கல்  செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்