முக்கிய செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஜூன்.- 7 - தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் குடி கொண்டுள்ள ஆறுபடை வீடுகளுல் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன, சொர்ணபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று(ஜூன் 6 ம் தேதி) மிக சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு கோபுர தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரது திருவுருவங்கள் மலையின் அடிவாரப் பாறையில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள வேலுக்கே அனைத்து அபிஷேகங்களும் நடக்கிறது. 

அங்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. அதன்படி இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தவும், ரூ. 5 கோடியில் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேக பணிகள் துவக்கமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட 7 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், வல்லப கணபதி, கோவர்த்தானம்பிகை விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. கோயிலுக்குள் உள்ள அனைத்து தூண்களிலும் உள்ள சுவாமிகளின் கற்சிலைகள், கற்சுவர்கள் அனைத்தும் வாட்டர் பிளாஸ்டர் முறையில் சுத்தம் செய்யப்பட்டு வார்னீஸ் அடிக்கப்பட்டது. 

கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்களின் மேல் பகுதி கமலம் வரையப்பட்டன. கம்பத்தடி மண்டபத்தில் சுழலும் லிங்கம், ஆஸ்தான மண்டபத்தில் சுழலும் நந்தி, லிங்கம், கலைநயத்துடன் புதுமையான முறையில் வரையப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் திருப்பணிகள் துவங்கும் வகையில் ஏப்ரல் 10 ம் தேதி பாலாலயம் நடந்தது. மூலவர்களின் திருவுருவங்கள் மரத்தினால் செய்யப்பட்டு சண்முகர் சன்னதியில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. 

மூலஸ்தானம் மூடப்பட்டு சுவாமிகள் புதுப்பிக்கும் பணி நடந்தது. பணிகள் முடிந்து நேற்று முன்தினம் மாலை மூலவர்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு சக்தி கலையேற்றம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக தினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு 8 ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஜூன் 2 ம் தேதி முதல் நடந்து வந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை 5 மணிக்கு பூர்த்தி செய்யப்பட்டன. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய தங்கம் மற்றும் வெள்ளி, பித்தளைக் குடங்களை சிவாச்சார்யார்கள் தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க காலை 5.30 மணிக்கு ராஜகோபுரத்திற்கு எடுத்து சென்றனர்.

அதனைத் தொடர்ந்து 5.45 மணிக்கு வல்லப கணபதி, கோவர்த்தானம்பிகை விமானங்களுக்கு புனித நீர் அடங்கிய குடங்கள் கொண்டு செல்லப்பட்டன. 

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சண்முக நாதன் பச்சைக் கொடி அசைத்து பூஜைகளை துவக்கி வைத்தார். அதன் பின்னர் ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களுக்கு சம காலத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. அனைத்து பூஜைகளும் முடிந்து ராஜகோபுரத்தில் உள்ள 7 கலசங்களுக்கும் 7 சிவாச்சார்யார்கள், 2 விமானங்களுக்கு 2 சிவாச்சார்யார்கள் ஆகியோர் குடங்களில் இருந்த புனித நீரை காலை 6.45 மணிக்கு கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா தீப தூபாரதனைகளும் நடந்தன. காலை 7 மணிக்கு மூலவர்கள் மற்றும் கோவர்த்தானம்பிகைக்கு புனித நீர் மூலம் மகா அபிஷேகம் நடந்தது. நேற்று மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

கும்பாபிஷேகத்தை காண அதிகாலை 3 மணியில் இருந்தே பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவியத் தொடங்கினர். பாஸ் வழங்கப்பட்ட வி.ஐ.பிக்கள், பக்தர்களும் கோயில் மேல்தளத்தில் இருந்து கும்பாபிஷேம் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஸ் கிடைக்கப் பெறாதவர்கள் கோயில் முன்பு உள்ள ரோடுகளில் அமர்ந்து தரிசனம் செய்தனர். எங்கு திரும்பினும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. 

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், போஸ், சாமி, தமிழரசன், சுந்தரராஜன், ராஜா, மாநகராட்சி அ.தி.மு..க. தலைவர் சாலைமுத்து, முன்னாள் எம்.பிக்கள் ராஜன் செல்லப்பா, ராம்பாபு, மாவட்ட கலெக்டர் சகாயம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், தொகுதி பொறுப்பாளர் தர்மராஜ், நகர இணைச் செயலாளர் வசந்தி, 68 வது வட்ட முன்னாள் பிரதிநிதி அரிராமன், அ.தி.மு.க. ஒன்றிய பொருளாளர் கே. கருத்தக்கண்ணன், ஒன்றிய செயலாளர் இரா. சுப்பிரமணி, இந்து அறநிலையத் துறை கமிஷனர் கலைவாணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

பட விளக்கம்

1. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் பச்சைக் கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் எம்.எல்.ஏக்கள் முத்துராமலிங்கம், சாமி, தமிழரசன், சுந்தரராஜன், ராஜா, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாநகராட்சி அ.தி.மு.க. தலைவர் சாலைமுத்து உட்பட பலர் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: