முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச அரிசி திட்டம் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை சட்டப்பேரவையில் ஜெயலலிதா எச்சரிக்கை

புதன்கிழமை, 8 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 8 - இலவச அரிசி திட்டத்தில் நியாய விலைக் கடைகளில் 5 கிலோ அரிசி (பச்சை அரிசி, புளுங்கல் அரிசி) வாங்க சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் பேசியதாவது:- நிழல் சட்டமன்ற சபாநாயாகராக இருந்த தாங்கள் நிஜ சட்டமன்ற சபாநாயகரானதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 20 கிலோ இலவச அரிசி வழங்கும் பொழுது எனது தொகுதியில் சில கடைகளில் 5 கிலோ பச்சரிசி அல்லது புளுங்கல் அரிசி வாங்கும் படி கட்டாயப்படுத்துகிறார்கள்.

அமைச்சர் செல்லூர் ராஜூ (குறுக்கீட்டு):- நாங்கள் யாரிடமும் 5 கிலோ அரிசி வாங்க சொல்லி கட்டாயப்படுத்தில்லை விரும்பியவர்கள் விரும்பிய அரிசி வாங்கலாம்.

குணசேகரன் (கம்யூ):- எனது தொகுதியில் சில கடைகளில் 5 கிலோ அரிசி வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதா (குறுக்கீட்டு):- நியாய விலை கடைகளில் கட்டாயம் 5 கிலோ பச்சரிசி என்ற எந்த உத்தரவையும் அளிக்கவில்லை. எந்த கடையிலாவது கட்டாயப்படுத்தவினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி ஏதாவது தெரிந்தால் கூறலாம்.

குணசேகரன் (கம்யூ):- முதியோர் உதவித்தொகைகள் வங்கி மூலம் வழங்கப்படுவது வரவேற்க்க தக்கது. வங்கி கணக்குளை அரசே துவக்கினால் நல்லது வங்கிகள் இல்லாத இடங்களில் தபால் நிலையங்கள் மூலம் பணம் விநியோகிக்கப்பட வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா (குறுக்கீட்டு):- தபால் நிலையங்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட பணம் முறையாக விநியோகிக்கப்படாமல் முறைகேடு நடந்ததால் தான் வங்கி மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அரசாங்கம் முழு நிதியையும் வங்கிக்கு கொடுத்து விடும் வங்கி பென்ஷன் தாரர்கள் பெயரில் கணக்கு துவங்கி ஸ்மார்ட் கார்ட் மூலம் பணம் வழங்கும்.

குணசேகரன் (கம்யூ):- கச்சத்தீவை மீட்க உறுதியான நடவடிக்கை வேண்டும். அரசு கேபிள் திட்டத்தை வரவேற்கிறோம். சூரிய ஒளி பசுமை வீடு திட்டத்தை ஆதரிக்கிறோம். விலைவாசி உயர்வை கட்டுபடுத்த ரூ.50 கோடி விலைக் கட்டுப்பாட்டு நிதி குறைவான தொகையாக உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா:- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரூ.50 கோடி விலைக்கட்டுப்பாட்டு நிதி வட்டியில்லா நிதி,50 கோடி குறைவான தொகை அல்ல. அது அவசர தேவைக்கான நிதிதான் தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும்.

குணசேகரன் (கம்யூ):-  தாலிக்கு தங்கம் என்பது 4 கிராம் வரவேற்க்க தக்கது. எங்கள் ஊரில் எல்லாம் 6 கிராமில் தாலி அணிவார்கள். நான் எனது தொகுதி மக்களிடம் நீங்கள் கட்டாயம் ஜெயித்து முதல்வராவீர்கள். அப்போது உங்களிடம் 4 கிராம் தங்கம் என்பதை மாற்றி 6 கிராம் தங்கமாக அறிவிக்க கோரிக்கை வைப்பேன் என்றேன். அதன்படி 4 கிராம் என்பதை 6 கிராமாக மாற்றி தருவீர்களா?

முதல்வர் ஜெயலலிதா:-  உங்கள் தொகுதியில் வசூல் செய்து நாங்கள் தருகிற 4 கிராம் தங்கத்துடன் சேர்த்து 6 கிராமாக கொடுத்து விடுங்கள். இவ்வாறு முதல்வர் கூறியதும் சபையில் சிரிப்பலை எழுந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்