முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,மே- .9 - ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழி எம்.பி. மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர்களின் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் கனிமொழி சார்பாக அப்பீல் செய்யப்படுகிறது.  2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கை ஆணையம் அறிவித்தது. இந்த ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டதோடு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அதன்படி சி.பி.ஐ. விசாரணையை முடக்கிவிட்டதோடு கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் குற்றப்பத்திரிகையை டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில்  தாக்கல் செய்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹூரா, ராசாவின் தனிச்செயலாளர் சந்தோலியா, ஸ்வான் கம்பெனி நிர்வாக இயக்குனர் பால்வா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனையொட்டி அவர்கள் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதில் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் லாபம் அடைந்த ஸ்வான் கம்பெனி மற்றும் பல கம்பெனிகள் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியது தெரியவந்தது. கலைஞர் டி.வி.யில் 20 சதவீத பங்கு கனிமொழிக்கு இருக்கிறது. கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கும் 20 சதவீத பங்கு உள்ளது. அதனால் ரூ.214 கோடி கைமாறியது தொடர்பாக கனிமொழி, தயாளு அம்மாள், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர்களிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் 2-வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் கனிமொழி, சரத்குமார் மற்றும் 5 கம்பெனிகளின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் இடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் கொடுக்க மறுத்த சி.பி.ஐ. கோர்ட்டு நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டது. பின்னர் இவர்களும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். தமக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சி.பி.ஐ.கோர்ட்டில் கனிமொழியும் சரத்குமாரும் மனுத்தாக்கல் செய்தனர். இவர்களின் மனுக்களை சி.பி.ஐ.கோர்ட்டு கடந்த மாதம் 20-ம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது. இதனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழியும்,சரத்குமாரும் அப்பீல் செய்தனர். அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு ஐகோர்ட்டு தீர்ப்பை பல முறை ஒத்திவைத்தது. இறுதியில் நேற்று கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அஜீத் பாரிஹோகே தள்ளுபடி செய்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியும் சரத்குமாரும் சம்பந்தப்பட்டிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. இவர்களின் ஊழலின் தன்மையை கருத்தில் கொண்டு கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி அஜீத் பார்ஹோகே தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கியபோது கனிமொழி தாயார் ராஜாத்தி அம்மாள், தி.மு.க. பாரர்லிமெண்டரி கட்சி தலைவர் டி.ஆர.பாலு ஆகியோர் கோர்ட்டில் இருந்தனர். ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து கனிமொழியின் சிறைவாசம் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கிடையில் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் இன்று அப்பீல் செய்யப்படும் என்று கனிமொழியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சண்முக சுந்தரம் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்