முக்கிய செய்திகள்

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-சி.வி.சண்முகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 9 - அதிக அளவில் முறைகேடாக கல்வி கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டபேரவையில் அறிவித்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய பா.ம.க. உறுப்பினர் கணேஷ்குமார் பேசும்பொழுது, தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பது பற்றி குறிப்பிட்டு கட்டண கொள்ளையை தடுக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு குறுக்கிட்டு பேசிய கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது, இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பள்ளிகளில் கட்டண கொள்ளையடிப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க உறுப்பினர் முயல்கிறார். ஏற்கனவே  பள்ளி கட்டணம் சம்பந்தமாக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டு அது பள்ளி கட்டணம் பற்றி பரிந்துரைத்தது.

அதுபற்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு நீதிமன்றத்தில் 2010-11-ம் ஆண்டு கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். கூடுதாக வசூலிக்கப்படும் தொகை வைப்பு நிதியாக வைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து ஆராய ரவிராஜன் கமிட்டி போடப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு முடிவு செய்ய எந்த அதிகாரமும் இல்லை. ரவிராஜன் கமிட்டி அறிக்கை வந்த பிறகு பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோர் புகார் பெறப்படும். அதிக அளவில் முறைகேடாக கல்வி கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: