முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக்., வெளியுறவுத்துறை செயலாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் 10 - இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் இம்மாத இறுதியில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி மும்பையில் தாஜ் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம், காமா மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சுமார் 180 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் தடைபட்டன. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் கூடி பேச்சு நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாடுகளின் அதிகாரிகள் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதையடுத்து இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இம்மாத இறுதியில் மீண்டும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார். 

இம்மாத இறுதியில் நடக்கும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது பாதுகாப்பு, நதிநீர், தொழில், வர்த்தகம் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வெளியுறவுத்துறை செயலாளர்கள் கூட்டம் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நிருபமா ராவ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்