முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தயாநிதிமாறனிடம் விசாரிக்க சி.பி.ஐ திட்டம்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.10 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பல முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை செயலாளர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. அதேபோல் முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ.திட்டமிட்டுள்ளது. இந்த விசாரணைகள் அனைத்தும் வரும் ஜூலை -ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். காரணம் அன்றைய தினம்தான் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பான தனது அறிக்கையை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்கிறது.

இதனிடையே பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ கூறுகையில் கூட்டுக்குழுவால் நடத்தப்பட்டு வரும் விசாரணை பற்றி விளம்பரப்படுத்தி அதை உணர்வுப்பூர்வமானதாக தாம் விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் ரத்தன் டாடா, அனில் அம்பானி,நீரா ராடியா ஆகியோர் சாட்சிகளாக வரும்படி அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படமாட்டாது என்றும் சாக்கோ தெரிவித்தார்.  ஸ்பெக்டரம் ஊழலில் பலனடைந்ததாக 10 கம்பெனிகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது. அந்த கம்பெனிகளின் பிரதிநிதிகள் யாராக இருந்தாலும் தேவைப்படும்போது அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் சாக்கோ தெரிவித்தார். தயாநிதி மாறன் மற்றும் முன்னாள் செயலாளர்களிடம் விசாரணை நடத்துவதன் மூலம் பல உண்மைகள் வெளிவரும் என்று சி.பி.ஐ. கருதுவால் விரைவில் அவர்களிடம் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. இதற்கிடையில் கடந்த 10 ஆண்டு காலமாக மொபைல் லைசென்சுகள் ஒதுக்கீடு பற்றி விசாரணை நடத்தி வரும் கூட்டுக்குழு முன்பு ஆஜரான தணிக்கைத்துறை அதிகாரி சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்பெல்லாம் அமைச்சரகள் குழுவுக்கே முழுப்பொறுப்பும் இருந்தது. ஆனால் அதை மாற்றி விலை நிர்ணயம் செய்வதில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்திற்கே முழு அதிகாரம் உண்டு என்று மாற்றியதில் தயாநிதி மாறனுக்கே முக்கியப்பங்கு உண்டு அவர்தான் இதில் கருவியாக இருந்திருக்கிறார் என்று தணிக்கைத்துறை அதிகாரி கூட்டுக்குழுவில் கூறியுள்ளார். இதன்மூலம் தயாநிதிமாறனின் முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்