முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்தவர் கைது

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.16 - ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக கூறி ரூ.18.62 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சேலம் மாவட்டம் கொழிஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (22) ஓட்டல் நிர்வாகம் பற்றிய படிப்பு படித்து விட்டு சென்னையில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய கல்லூரிப் பேராசிரியர் மூலம் சென்னையைச் சேர்ந்த பிராங்க்ளின் (35) மற்றும் ஸ்டீபன்ராஜ் (32) ஆகியோர் இவருக்கு அறிமுகம் ஆனார்கள். தாங்கள் வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஆஸ்திரேலியாவில் ஓட்டல் வேலைகள் நிறைய இருப்பதாகவும் அங்கு வேலை வாங்கித்தர முடியும் என்றும் இவர்கள் மாரிமுத்துவிடம் சொன்னதை நம்பி மாரிமுத்துவும் அவருடைய வகுப்புத் தோழர்கள் ஏழு பேரும், இருவரிடமும் பல்வேறு தவணைகளில் ரூ.18 லட்சத்து 62 ஆயிரம் கொடுத்துள்ளனர்.

சொன்னபடி பிராங்க்ளினும் ஸ்டீபன்ராஜூம் இவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பாமல் பணத்தை மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

உதவி ஆய்வாளர் ஜான்சிராணி, ஸ்டீபன்ராஜை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார். பின்னர் ஸ்டீபன்ராஜ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆகும். தலைமறைவாக உள்ள பிராங்க்ளினை போலீசார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony