முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் திட்டம் - ஹெட்லி வாக்குமூலம்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜூன்.17 - மும்பை தாக்குதல் சதி திட்டத்தில் ஓபராய் ஓட்டல் இடம்பெறவில்லை என்று தீவிரவாதி ஹெட்லி கூறியுள்ளார். கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதி மும்பையின் பல இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். மும்பை ரயில் நிலையம், ஓபராய் ஓட்டல், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 186 பேர் பலியானார்கள். இதில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவர். 

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் கசாப் தவிர மற்ற அனைவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கசாப்புக்கு தனி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு ஹெட்லி அமெரிக்கா சென்று விட்டான். பின்னர் அவன் அமெரிக்கா உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போதுதான் மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது இவன்தான் என்பது தெரியவந்தது. இவன் அளித்த தகவலின் பேரில் இவனது கூட்டாளி ரஹ்மானும் கைது செய்யப்பட்டான். 

ஹெட்லி மீதான வழக்கு அமெரிக்காவின் சிகாகோ கோர்ட்டில் நடந்தது. வழக்கு முடிவில் மும்பை தாக்குதலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி ஹெட்லி விடுதலை செய்யப்பட்டான். ஆனால் கனடாவில் நடந்த தாக்குதல் வழக்கில் இவனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் விசாரணை நடந்து வந்த போது ஹெட்லி பரபரப்பான வாக்குமூலம் கொடுத்து இருந்தான். அந்த வாக்குமூலத்தில் மும்பை தாக்குதல் திட்ட இலக்கில் ஓபராய் ஓட்டல் இடம் பெறவில்லை. தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஹெட்லி வாக்குமூலம் அளித்துள்ள விவரம் இப்போது வெளியாகி உள்ளது. 

அவன் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு: மும்பையில் எங்கெங்கு தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த இடங்களை நான் வீடியோவில் பதிவு செய்தேன். அவற்றின் வரைபடங்களையும் சேகரித்தேன். இவற்றை பாகிஸ்தான் அனுப்பி வைத்தேன். முதலில் தயாரான தாக்குதல் பட்டியலில் சப்பாத் ஹவுஸ் இடம் பெறவில்லை. ஐ.எஸ்.ஐ. அதிகாரி மேஜர் இக்பாலிடின் உத்தரவின் பேரில் பின்னர் சப்பாத் ஹவுஸ் சேர்க்கப்பட்டது. தான் அனுப்பிய தாக்குதல் பட்டியலில் ஓபராய் ஓட்டல் இடம் பெற்றிருக்கவில்லை. சப்பாத் ஹவுஸ் வீடியோ எடுக்கும் முன்பு ஓபராய் ஓட்டலை படம் பிடித்து இருந்தேன். நான் அனுப்பிய சப்பாத் ஹவுஸ் வீடியோவுடன் ஓபராய் ஓட்டல் வீடியோவும் சேர்ந்து இருந்ததால் அந்த ஓட்டலையும் தீவிரவாதிகள் தாக்கி விட்டனர். இவ்வாறு அவன் கூறியுள்ளான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்