முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ ராட்சத சுறா

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி,ஜூன்.17 - புதுச்சேரியை சேர்ந்த மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ ராட்சத சுறா மீன் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 15 ம் தேதியில் இருந்து தொடர்ந்து 45 நாட்கள் மீன்பிடி தடை காலமாக அமலில் இருந்தது. கடந்த மாதம் 15 ம் தேதியுடன் மீன்பிடி தடை காலம் விலக்கிக் கொள்ளப்பட்டது. கடந்த ஒரு வாரமாக விசைப்படகு மூலம் அதிகமாக மீன்கள் கிடைக்கவில்லை. புதுச்சேரியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இவர்களது வலையில் அபூர்வமாக கிடைக்கும் பால்சுறா வகையை சேர்ந்த சுறா மீன் பிடிபட்டது. 

பிடிபட்ட சுறாவை பிற்பகல் 12 மணிக்கு தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பிடிபட்ட சுறா மீன் குறித்து மீனவர்கள் கூறும் போது, எங்கள் சுருக்கு வலையில் திடீரென்று ராட்சத பால் சுறா மாட்டிக் கொண்டது. சுறாவை வலையில் இருந்து அப்புறப்படுத்த நாங்கள் முயன்ற போது எங்களுடன் வந்த ரமேஷ் என்பவரின் கையை கடித்து காயப்படுத்தி வலையையும் சேதப்படுத்தி விட்டது. காயம்பட்ட ரமேஷ் தற்போது புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

படகில் இருந்து சுறாவை மீனவர்கள் 6 பேர் ஒன்று சேர்ந்து கயிறு கட்டி தோளில் சுமந்தபடி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். மருத்துவத்திற்கு அதிக பயன்படும் சுறாவை கேரளாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு எடுத்தார். 125 கிலோ எடை கொண்ட இந்த மீனை கிலை 245 ரூபாய் விலை வைத்து ஏலம் கேட்கப்பட்டது. 

வியாபாரி கூறுகையில், மூட்டு வலி, இடுப்பு வலியை போக்க சுறா மீன் அதிகளவு பயன்படுகிறது. தற்போது பிடிபட்டுள்ள பால் சுறா இரண்டு கிலோவில் இருந்து 150 கிலோ வரை வளரும் தன்மை கொண்டது. இந்த சுறாவின் இறக்கைகள் தனியாக வெட்டி எடுக்கப்பட்டு மருத்துவத்திற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக மீன் எண்ணெய் மாத்திரை உட்பட பல்வேறு மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony