முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் டி.வி. பிரச்சினை: சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவுக்கு கடிதம்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.17 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது கடந்த 2008 - 09 ல் டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தனது கிளை நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு உரிமம் பெற்றது. இது பற்றி விசாரணை நடத்திய சி.பி.ஐ. ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறுவதற்காக டி.பி. ரியாலிட்டி நிறுவனம் 200 கோடி ரூபாயை கலைஞர் டி.விக்கு கொடுத்திருப்பதை கண்டுபிடித்தது. சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் இந்த பணப் பரிமாற்றம் நடந்ததையும் சி.பி.ஐ. கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ஆனால் இதனை கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் மறுத்தார். சினியுக் நிறுவனத்திடம் இருந்து நாங்கள் கடனாகத்தான் பெற்றோம். அந்த கடனை திருப்பிக் கொடுத்து விட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். 

இதனை ஏற்க மறுத்த சி.பி.ஐ. கடந்த மாதம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கனிமொழி, சரத்குமார் இருவரும் சதி செய்ததாக குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கலைஞர் டி.வி பெற்ற ரூ.  200 கோடி குறித்து சி.பி.ஐ. மேலும் விசாரணை நடத்தியது. அப்போது இந்த பணம் தொடர்பான பரிமாற்ற ஆதாரங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து கலைஞர் டி.விக்கு கைமாறிய ரூ. 200 கோடியை பறிமுதல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது. பணத்தை மீட்குமாறு அமலாக்கப்பிரிவுக்கும் சி.பி.ஐ. கடிதம் எழுதியுள்ளது. சட்டரீதியாக செயல்பட்டு ரூ. 200 கோடியை மீட்க சி.பி.ஐ. வலியுறுத்தி உள்ளது. அதன் பேரில் கலைஞர் டி.விக்கு டி.பி. ரியாலிட்டி நிறுவனம் கொடுத்த 200 கோடியை பறிமுதல் செய்யும் பணியை அமலாக்கப் பிரிவு தொடங்கியுள்ளது. கறுப்பு பணம் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு இந்த நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்