முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்ரீரங்கம் வருகை: அமைச்சர்கள் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

திருச்சி. ஜூன்.16 - தமிழக முதல்வர் ஜெயலலிதா திருவரங்கம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். மேலும் பல கோடி ரூபாய் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக வரும் 19ந்தேதி (ஞாயிறு) திருச்சி வரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக அதிமுகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் திருவரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 41 ஆயிரத்து 848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா 3வது முறையாக முதலமைச்சரானார். அன்று மாலையில் சென்னை கோட்டைக்கு சென்ற ஜெயலலிதா அங்கு 20 கிலோ இலவச அரிசி திட்டம், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு அரை பவுன் தங்கம் இலவசம், பெண் அரசு ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 7 திட்டங்களை நிறைவேற்றிட உத்தரவிட்டு அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதையடுத்து தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒன்றை உருவாக்கி அதற்காக ஒரு அமைச்சரையும் நியமித்தார்.

சமீபத்தில் நடந்த சட்டபேரவை கூட்டத்தொடரில் கவர்னர் பர்னாலா உரையில் ஏராளமான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதை தொடர்ந்து டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினை, மின்தட்டுப்பாடு, மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள், வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 65 பக்க கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொடுத்தார்.

இந்நிலையில் அரசு விழா மற்றும் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 19ந்தேதி பிற்பகல் ஜெயலலிதா திருச்சிக்கு தனி விமானம் மூலம் வருகிறார். 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் அவர் திருவரங்கம் தொகுதியில் 19ந்தேதி மாலையில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பணிகள், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இரண்டாவது நாளான 20ந்தேதி(திங்கள்) அந்தநல்லூர் ஒன்றியத்தில் கிராமம் தோறும் சென்று வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு தனது நன்றியினை தெரிவிக்க உள்ளார். அதன்பின்னர் 21ந்தேதி(செவ்வாய்) மணிகண்டம் ஒன்றியத்தில் கிராமம் தோறும் சென்று வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்கிறார்.

2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு 21ந்தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா சென்னை செல்கிறார்.

வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக திருச்சியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா வருவதால் அதிமுகவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது திருவரங்கம் தொகுதியில் ஜெயலலிதா கிராமம், கிராமமாக சென்றதைபோல் இப்போது நன்றி சொல்லவும் கிராமம் கிராமமாக செல்ல உள்ளார். 

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த திருச்சி அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் நகரில் நடைபெற உள்ள அரசு விழா இடத்தை பார்வையிடுவதற்காக தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆகியோர் நேற்று காலை திருச்சி வந்தனர். 

அதைத்தொடர்ந்து அமைச்சர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏவுமான ஆர்.மனோகரன், திருச்சி எம்.பி.குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் மஹாலி, திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, திருச்சி போலீஸ் டி.ஐ.ஜி அமல்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.பி.nullனாட்சி, சந்திரசேகர், டாக்டர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பேச்சியம்மாள், திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, திருச்சி ஆர்.டி.ஓ.டாக்டர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் திருச்சி மன்னார்புரம் அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், என்.ஆர்.சிவபதி ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் அரசு விழா நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக சென்றனர். ஸ்ரீரங்கத்தில் உள்ள தெற்கு சித்திரை வீதி, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலவாசல் பகுதி, மேலூர் செல்லும் சாலை ஆகிய இடங்களை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பார்வையிட்டனர். 

விழாவில் கலந்து கொள்ளக்கூடிய பயனாளிகள், பொதுமக்கள், ஆகியோர்கள் சிரமமின்றி உட்கார்ந்து விழா நிகழ்ச்சியை காணும் வகையில் இடம் தேர்வு நடந்தது. இறுதியில் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் அரசு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விழா மேடை அமைக்கும் பணி மின்னல் வேகத்தில் உடனடியாக துவங்கப்பட்டது. 

அமைச்சர்களுடன் அதிமுக நிர்வாகிகள், வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ பரஞ்சோதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிவாசன், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், மாவட்ட பாசறை இணை செயலாளர் பெஸ்ட் பாபு, பொதுக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி முருகேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி சுப்பையா, மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சுப்பையா, இலக்கிய அணி தலைவர் கொய்யாத்தோப்பு செல்வராஜ், வரகனேரி சரவணன், கே.கே.நகர் வினோத், மாவட்ட ஆணழகன் கே.கே.நகர் கார்த்திகேயன், கேபிள் தினகரன், வீரங்கநல்லூர் வீரமணி, என்ஜினீயர் பரமசிவம், என்ஜீனீயர் முருகானந்தம், கேபிள் சேகர், அஸ்ரப் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் போலீசார் வீடு வீடாக அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் வீடு வீடாக சோதனை நடத்திய போலீசார் புதியதாக குடியேறியவர்கள், வெளியூர்காரர்கள், வீட்டினுள் தங்கி உள்ளார்களா? என்பதை அறிய குடும்ப அட்டையை வாங்கி சரிபார்த்தனர். ஸ்ரீரங்கம் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல அரசு விழாவில் கலந்து கொள்ள 19ந்தேதி மாலை ஸ்ரீரங்கம் நகருக்கு வருகை தர உள்ள முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் புதிய பொழிவுடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony