முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது: அமைச்சர் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாமக்கல்,ஜூன்.17 - நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசுத் துறைகளின் பணி ஆய்வு கூட்டம் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் பி. தங்கமணி தலைமையில் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவர் தனபால், மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அமைச்சர் தங்கமணி பேசியதாவது, 

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசின் அனைத்து திட்டங்களும் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளார். அதனடிப்படையில்தான் அனைத்து அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து ஆய்வுகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக வருவாய் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, விபத்து நிவாரணம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகள், இயற்கை மரணம், விதவை உதவித் தொகை போன்ற அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கிடைத்திட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும். சராசரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிற மனுநீதி நாள் முகாமில் 300 க்கும் மேற்பட்ட மனுக்கள் வருகின்றன. பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிவு செய்து ஒரு மாத காலத்திற்குள் புதிய தீர்வினை மனுதாரருக்கு வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 65 ஆயிரத்து 311 பேர் முதியோர் உதவித் தொகை பெற்று வருகிறார்கள். 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் எவ்வித குறைபாடுமின்றி தரமான அரிசியை நியாய விலைக் கடைகள் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு அரிசி வழங்குவதில் ஏதேனும் முறைகேடுகள் ஏற்பட்டாலோ, அல்லது அரிசி கடத்தல் நடந்தாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேசன் கடைகளை பிரித்து பகுதிநேர கடைகள் உருவாக்கவும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் சுலபமான முறையில் மக்கள் பெறுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 

அதே போல சொந்தக் கட்டிடத்தில் இயங்காத நியாய விலைக் கடைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நியாய விலைக் கடைகளை கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் அறிவித்தபடி குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தால் ரூ. 5 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படும். பட்டா மாறுதல் கேட்டு கிராம அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்தாலே போதுமானது. சட்டம் ஒழுங்கை காப்பதில் காவல் துறை உரிய முயற்சியை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 

முதல்வர் அறிவித்தபடி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணி வழங்கப்படுவதுடன் அதன் பயன்பாடு குறித்து அவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து சொல்ல வேண்டும். பொது மருத்துவத் துறை மற்றும் சுகாதார துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டிட வசதிகள், நவீன சிகிச்சைக்கான கருவிகள் ஆகியவற்றை வழங்கவும், காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் தற்போதுள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சையளிக்க வேண்டும். 

கிராமங்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் ஆகிய துறை அலுவலர்கள் கலந்து பேசி குடிநீர் வழங்கும் பணியை முறைப்படுத்திட வேண்டும். பிற்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை மூலம் மாணவ, மாணவிகள் தங்கி படிப்பதற்கு விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள், உரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் ஆகியவற்றை அமைத்திட வேண்டும். இது போன்ற அனைத்து நலத்திட்ட உதவிகளும் தகுதியுள்ள நபர்களுக்கு கிடைத்திட அலுவலர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்