முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னமுட்டம் படகுகட்டும் தளத்தில் பயங்கர தீ விபத்து

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில், ஜூன்.18 - கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகம் பகுதியில் புதிய படகுகள் கட்டும் தளம் உள்ளது. இந்த தளத்தில் புதிய விசைபடகுகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. 

நேற்று காலை 3 மணியளவில் இந்த படகுதளத்தில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருந்த விசைப்படகில் திடீரென்று தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதனால் தீப்பிடித்த விசைப்படகின் அருகில் நின்ற கட்டிமுடிக்கப்பட்ட வசைப்படகிலும் தீ பரவியது. தீ மளமளவென்று கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த சின்னமுட்டம் துறைமுக மீனவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரிகள் துரை, சிதம்பரம் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். 

கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்தில் ஒரு வாகனம் மட்டுமே இருப்பதால் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு அங்கிருந்த இரண்டு தீயணைப்பு வாகனங்களும் விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உதவி ஆய்வாளர் ரமேஷ் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

இந்த தீ விபத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தயாராக இருந்த இரண்டு பைபர் விசைப்படகுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. சேதமடைந்த படகுகளின் மதிப்பு சுமார் 1 கோடியாகும். ஒரு படகு கட்டி முடிப்பதற்கு சுமார் 60 முதல் 70 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். எரிந்த படகுகள் முட்டம் பகுதியை சேர்ந்த கென்னடி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சந்திரபோஸ் ஆகியோருக்கு சொந்தமானவையாகும். 

தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் பைப்பர் படகுகளில் ஒட்டப்படும் பைபர் காய்வதற்காக கேட்டலிஸ்ட் மற்றும் ஆக்ஸிலேட்டர் என்ற இரண்டு பெட்ரோலியப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இவை இரண்டும் அருகருகே இருந்து உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  காரணம் குறித்து தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்