முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் இன்று ஸ்ரீரங்கம் வருகை

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

திருச்சி. ஜூன்.19 - பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தனிவிமானம் மூலம் திருச்சி வருகிறார். அதைத்தொடர்ந்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றிபெற செய்த வாக்காள பெருமக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவரங்கம் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அவர் முதன்முதலாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்து அரசு நலஉதவி திட்டங்களை வழங்கவும் இன்று (ஞாயிறு) திருச்சி வருகிறார். தொடர்ந்து அவர் 20,21 ஆகிய தேதிகளில் தங்கி திருவரங்கம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

இதற்காக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் தனிவிமானம் மூலம் புறப்பட்டு காலை 8.30 மணிக்கு திருச்சி வந்து சேருகிறார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலம் சங்கம் ஓட்டலில் சென்று தங்குகிறார்.

பின்னர் மாலையில் 5.00 மணிக்கு திருவரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு 3000 பேருக்கு நலத்திட்டங்களை வழங்குகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி  பேசுகிறார். இதற்காக திருவரங்கத்தில்  தெற்கு சித்திரை வீதி, மேல சித்திரை வீதி சந்திப்பு இடத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது.

60 அடி அகலத்தில் 30 அடி நீளத்தில் பிரமாண்டமாக மேடை அமைக்கும் பணியில் நேற்று முன்தினம் முதல் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விழா மேடை அமைக்கும் பணியை கூடுதல் டி.ஜி.பி.ஜார்ஜ் நேற்று முன்தினம் பார்வையிட்டு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். விழா மேடையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நிகழ்ச்சிகளை காண முடியாதவர்கள் பார்ப்பதற்கு வசதியாக 2பெரிய திரை டி.வி.க்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் விழாவுக்கு வருகை தரும் வி.ஐ.பி. வாகனங்கள் அனைத்தும் திருவரங்கம் மூலத்தோப்பில் மேலூர் சாலை ரோட்டில் உள்ள தனியார் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தவும், பொதுமக்கள் பார்வையாளர்கள் வாகனங்களை திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா காரில் புறப்பட்டு திருச்சி சங்கம் ஓட்டலில் தங்குகிறார். அதன்பின்னர் மறுநாள் 20ந்தேதி திருவரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். மாலை 4 மணிக்கு சங்கம் ஓட்டலில் இருந்து முதல்வர் ஜெயலலிதா திறந்த வேனில் புறப்பட்டு கிராமம் கிராமமாக சென்று  தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 

சட்டசபை தேர்தலின்போது வாக்கு கேட்டு எப்படி திறந்தவேனில் கிராமம் கிராமமாக எவ்வாறு சென்றாரோ அதேபோல சென்று ஆங்காங்கே வேனை நிறுத்தி பேசுகிறார்.

இதேபோல 21ந்தேதி மாலை 5 மணிக்கு மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். அதனை தொடர்ந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

இதையொட்டி தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் திருச்சியில் முகாமிட்டு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சித்திரை வீதியில் எளிய முறையில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் வருகையை முன்னிட்டு அவரது முழு நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் மேற்பார்வையில் மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, மத்திய மண்டல டி.ஐ.ஜி.க்கள் அமல்ராஜ், சந்தீப்மிட்டல், 9எஸ்.பி.க்கள், 9 ஏ.டி.எஸ்.பி.க்கள், 31 டி.எஸ்.பிக்கள்., 87 இன்ஸ்பெக்டர்கள், 180 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2500 போலீசார், 500 ஆயுதப்படை பெண் போலீசார், சிறப்பு காவல்படை போலீஸ் 600 பேர், போக்குவரத்து பிரிவு போலீஸ் 340 பேர் உள்பட பல பிரிவுகளிலிருந்து சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர 2 அதிவிரைவுப்படையினர்(க்யூ.ஆர்.டி.) ஈடுபடுத்தப்படுகின்றனர். 

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.ஜார்ஜ் உளவுப்பரிவு டி.ஐ.ஜி.சத்தியமூர்த்தி, உள்ளிட்ட அதிகாரிகள் முதல்வர் ஜெயலலிதா தங்க உள்ள சங்கம் ஓட்டல், நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக திருச்சி வருவதால் அவரை வரவேற்க அதிமுகவினர் தயாராகி வருகின்றனர். திருச்சி மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைகள் சீர் செய்யப்பட்டுள்ளன. சாலை தடுப்புகளில் வெள்ளை வர்ணச்சு அடிக்கப்பட்டுள்ளது. திருவரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் அரசு விழா நடைபெற உள்ள தெற்கு சித்திரைவீதி, மேலச்சித்திரை வீதி சந்திக்கும் இடத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து முடிந்துள்ளன.

ஒட்டு மொத்தத்தில் திருச்சி மாநகரம் விழாக்கோலம் nullண்டுள்ளது.

முன்னதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து திருவரங்கம் தெற்கு சித்திரை வீதியில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ராமலிங்கம், என்.ஆர்.சிவபதி ஆகியோர் நேற்று காலை பார்வையிட்டனர். அப்போது  முன்னாள் அமைச்சர்கள் கே.கே.பாலசுப்பிரமணியன், அண்ணாவி, மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மனோகரன் எம்.எல்.ஏ, இளவரரன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.பரஞ்சோதி, பேரவை செயலாளர் சீனிவாசன், மாநகராட்சி கமிஷனர் பால்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்