முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசுடன் சுமூக உறவு: முதல்வர் ரங்கசாமி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூன்.19 - தமிழக அரசுடன் சுமூகமான உறவு உள்ளது என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். புதுவை முதல்வர் ரங்கசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றது. எங்களது கட்சி தேர்தலில் முதன்மையான கட்சியாக வெற்றி பெற்று 31 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், என்.ஆர்.காங்கிரசை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவும், கட்சியின் சின்னமாக ஜக்கு சின்னத்தை எங்களின் சின்னமாகவும் அங்கீகரித்துள்ளது. இதற்கு வாய்ப்பளித்த புதுவை மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

தேர்தலின் போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய தொழிற்சாலைகள் வருவதற்கும், மாநிலத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றவும் போதுமான நடவடிக்கை எடுக்கப்படும். 

சமூதாய முன்னேற்றத்திற்கு தேவையான கல்வி எளிதாகவும், தரமானதாகவும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள் நலன் காக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: அமைச்சரவையில் மீதமுள்ள ஒரு அமைச்சர் எப்போது நியமிக்கப்படுவார்? 

பதில்: விரைவில் நியமிக்கப்படுவார்.

கேள்வி: அமைச்சர்களுக்கான இலகாக்கள் எப்போது ஒதுக்கப்படும்?

பதில்: விரைவில் கொடுக்கப்படும். 

கேள்வி: நியமன எம்.எல்.ஏ.க்கள் பட்டியில் மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டு விட்டதா?

பதில்: மத்தியி அரசின் அனுமதி கிடைத்தவுடன் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்படுவார்கள். 

கேள்வி: அரசு நிதி பற்றாக்குறையில் இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்: நிதி நிலைக்கேற்ப மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிக நிதி பெறுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். 

கேள்வி: டெல்லிக்கு எப்போது செல்வீர்கள்? மத்திய அமைச்சர்களை சந்திப்பீர்களா?

பதில்: விரைவில் செல்ல உள்ளேன். மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியை சந்தித்து வாழ்த்து பெறுவேன். கேள்வி: காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்று விட்ட நிலையில் சோனியாவை சந்திப்பதில் பிரச்சனை ஒன்றும் இல்லையா?

பதில்: காங்கிரஸ் தலைவி சோனியாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பதில் ஒன்றும் தவறில்லை.கேள்வி: சமச்சீர் கல்வி திட்டம் புதுவையில் தொடர்கிறதா?

பதில்: சமச்சீர் கல்வி திட்டத்தில் தமிழகத்தில் என்ன நிலைப்பாடோ? அதுதான் புதுவையிலும் பின்பற்றப்படும்.

கேள்வி: தமிழக அரசுடன் உறவு எப்படி உள்ளது?

பதில்: தமிழக அரசுடன் சுமூகமான உறவு உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்