234 தொகுதிகளையுமா காங்கிரஸ் கேட்பது!! கருணாநிதி கிண்டல்

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      அரசியல்
karu5

 

சென்னை,பிப்.27 - 234 தொகுதிகளையும் காங்கிரஸ் கேட்கிறது என்று கருணாநிதி கிண்டலடித்துள்ளார்.  தி.மு.க.வுடனான தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் மேலிடத்தால் அமைக்கப்பட்ட ஐவர் குழுவினர் சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. குழுவினருடன் கடந்த 19 ம் தேதி ஆலோசனை நடத்தினர். தொகுதி ஒதுக்கீடு, ஆட்சியில் பங்கு தருவது தொடர்பாக உத்தரவாதம், குறைந்தபட்ச செயல்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை அப்போது காங்கிரஸ் குழுவினர் வலியுறுத்தியதாக தெரிகிறது. 

இதையடுத்து டெல்லி சென்று சோனியா காந்தியிடம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் குழுவினர் 2 வது சுற்றுப் பேச்சுவார்த்தையை தி.மு.க. குழுவினருடன் நேற்று முன்தினம் நடத்தினர். அப்போதும் தங்களது கூடுதல் தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் தரப்பில் விட்டுக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. 

பின்னர் 2 ம் கட்ட பேச்சு நிலவரம் குறித்து தி.மு.க. குழுவினர் முதல்வரிடம் தெரிவித்தனர். அப்போது அறிவாலயத்தில் முதல்வர் இருந்த போதிலும் காங்கிரஸ் குழுவினரை சந்திக்கவே இல்லையாம். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கேள்வி: கூட்டணியில் இழுபறி ஏற்பட்டிருக்கிறதா?

பதில்: அப்படி எதுவும் இல்லை.

கேள்வி: காங்கிரஸ் எத்தனை தொகுதிகளை கேட்கிறது?

பதில்: 234 தொகுதிகளை கேட்கிறது. 

கேள்வி: ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையால் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதா?

பதில்: அது உங்கள் கற்பனை

கேள்வி: அடுத்தக் கட்ட பேச்சின் போது தொகுதி உடன்பாடு ஏற்பட்டு விடும் என்று கூறினீர்களே?

பதில்: நான் அப்படி கூறவே இல்லை. அடுத்தடுத்த பேச்சுக்களில் உடன்பாடு ஏற்படும் என்றுதான் கூறினேன்.

கேள்வி: காங்கிரஸ் கட்சியிடம் புதிய திட்டம் எதையும் தி.மு.க. தரப்பில் தெரிவித்திருக்கிறீர்களா?

பதில்: அது ரகசியமானது. 

என்று பதிலளித்தார். 

கூட்டணி ஆட்சி என்று வந்து விட்டாலே அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று பயப்படுகிறது தி.மு.க. தலைமை. மேலும் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுவது தி.மு.க. தொண்டர்களை உற்சாகமிழக்க செய்து விடும் என்றும், இரண்டு கட்சித் தொண்டர்களும் முழு மனதுடன் தேர்தல் பணியில் ஈடுபட மாட்டார்கள் என்பதும் தி.மு.க. தலைமையின் கருத்தாகும். 

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இடதுசாரிகள் இல்லாத நிலையில் விடுதலை சிறுத்தைகள் சேர்ந்தாலுமே கூட தி.மு.க. கூட்டணி பழைய பலத்துடன்தான் தொடர்கிறதே தவிர அதன் பலம் அதிகரிக்கவில்லை. காங்கிரஸ் கேட்கும் 65 இடங்களைத் தந்தால் தி.மு.க.வின் நிலை என்ன? என்பது தி.மு.க. தரப்பில் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: