முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, ஜூன்.- 20 - திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்று அரசு விழாவில் கலந்து கொள்வதற்காகவும், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அந்த நல்லூர் மற்றும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் நன்றி தெரிவிப்பதற்காகவும் மூன்று நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு காலை 10.25 மணிக்கு வந்தடைந்தார். தனி விமானம் மூலம் வந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலா வந்தார். திருச்சி விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவை திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருச்சி மாநகராட்சி மேயர் எஸ்.சுஜாதா, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.மாகாலி, திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, டி.ஐ.ஜி அமல்ராஜ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கே.மீனா, திருச்சி மாநகராட்சி ஆணையர் தி.த.பால்சாமி ஆகியோர் வரவேற்று பூச்செண்டு கொடுத்தனர்.

வரவேற்புக்கு பின்பு காரில் ஏறி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த முதல்வர் ஜெயலலதாவை தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், என்.ஆர்.சிவபதி, வைத்தியலிங்கம், கே.வி.ராமலிங்கம், திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.மனோகரன், திருச்சி எம்.பி. குமார், முன்னாள் அமைச்சர்கள் கே.கே.பாலசுப்பிரமணியன், குப.கிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் பூனாட்சி, இந்திராகாந்தி, ஸ்ரீரங்கம் முன்னாள் எம்.எல்.ஏ. பரஞ்சோதி உள்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு கொடுத்தனர். 

அதைத்தொடர்ந்து விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான அதிமுகவினர் காலை 7 மணி முதல் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்த முதல்வர் ஜெயலலிதா காரில் இருந்தபடியே அனைவரையும் பார்த்து கையசைத்து கொண்டே புறப்பட்டார். முதல்வரை பார்த்த உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள், பெண்கள், பொதுமக்கள் ஆகியோர் பதிலுக்கு கையசைத்தனர். 

தொடர்ந்து காரில் வந்த ஜெயலலிதாவை விமான நிலையத்தில் இருந்து திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் வரை இருபுறங்களிலும் திறண்டு இருந்த அதிமுகவினர் கைகளில் கொடிகளை ஏந்தி வரவேற்றனர்.  வழிநெடுகிலும் முதல்வரை வரவேற்கும் வகையில் வகையில் ஒயிலாட்டம், மயிலாட்டம், கேரளா ஜெண்டா மேளம், பறை மேளம் கொட்டி தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் முதல்வர் ஜெயலலிதா டி.வி.எஸ்.டோல்கேட்டில் இருந்து குட்ஷெட் மேம்பாலம் வழியாக தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை, கண்டோன்மெண்ட், எம்.ஜி.ஆர்.சிலை, புத்தூர் நால்ரோடு, தென்னூர் தில்லைநகர், கோகினூர் தியேட்டர், கரூர் பைபாஸ் பாலம், சத்திரம் பஸ் நிலையம், காவிரி பாலம், திருவானைக்காவல் மாம்பழச்சாலை வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முதல்வர் ஜெயலலிதா சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் வரலாறு காணாத வகையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ஏறத்தாழ விமான நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவுக்கு ஸ்ரீரங்கம் வரை முதல்வர் ஜெயலலிதாவை வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் நின்று வரவேற்றனர். அதேபோல ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் காரில் ஏறி ஸ்ரீரங்கத்தில் இருந்து சங்கம் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அப்போதும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் முதல்வர் ஜெயலலிதா சங்கம் ஓட்டலில் ஓய்வெடுத்தார். மாலையில்  திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து டி.வி.எஸ்.டோல்கேட் வரை ஏர்போர்ட் பகுதி அதிமுக செயலாளர் வெல்லமண்டி சண்முகம், பகுதி அவைத்தலைவர் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி ஆகியோர்களது தலைமையில் இரண்டு கி.மீ.தூரத்துக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தீரன் முகமது இக்பால், டாக்டர் வேலுசந்தர், திருச்சி மாவட்ட ஆணழகன், கே.கே.நகர் பி.கார்த்திகேயன் ஆகியோரும் வரவேற்றனர். ஸ்ரீரங்கத்தில் பொதுக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி முருகேசன், ஸ்ரீரங்கம் பகுதி கழக பிரதிநிதி முருகேசன் ஆகியோர்களது தலைமையில் சீருடையுடன் மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோல மாவட்ட மீனவரணி செயலாளர் பேரூர் கண்ணதாசன் தலைமையில் மீனவர்களும், மாவட்ட இளக்கிய அணி தலைவர் கொய்யத்தோப்பு செல்வராஜ் தலைமையிலும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்