முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவிற்கு இயக்குனர் சீமான் புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 20 - இலங்கை தமிழர்களை காக்க தீர்மானம் நிறைவேற்றி பேசியவர், பிரதமரிடம் தீர்மானத்தை வலியுறுத்தியவர் ஜெயலலிதா, புரட்சித் தலைவி என்ற பட்டத்திற்கு பொறுத்தமானவர் அவரை புரட்சித்தலைவி என்று அழைப்பதில் தமிழர்கள் பெருமைப்படுகிறோம். உங்கள் உருவில் வீர மங்கை வேலு நாச்சியாரை பார்க்கிறேன் என்று இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டினார்.ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்​அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. சைதாப்பேட்டை தேரடி திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:​ இலங்கையில் ஈழத் தமிழர்கள் அரை நூற்றாண்டு காலமாக விடியலுக்காக போராடி வருகிறார்கள். இலங்கையில் குடியேற சென்றவர்கள் எப்படி அந்த நாட்டு மண்ணுக்கு சொந்தம் கொண்டாட முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.ஈழம் தமிழர்களின் தமிழ் மடி அவர்கள்தான் அம்மண்ணின் மைந்தர்கள் ஈழத் தமிழர்களின் கடந்த கால வரலாற்றின் துயரம் நிறைந்ததாகவே இருந்துள்ளது. கோட்டையை ஆண்ட ஈழத் தமிழர்கள் இன்று கோணிப்பையை சுற்றிக் கொண்டு வாழ்கிறார்கள். இலங்கையில் நடந்த இறுதிப்போரில், தமிழர்கள் மீது கொத்து கொத்தாக குண்டுகள் போடப்பட்டன. இப்போர் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே மட்டும் நடைபெறவில்லை. இலங்கைக்கு ஆதரவாக 20 நாடுகள் போர்க்களத்தில் நின்றன. லிபியா நாட்டில் ஒரு பிரச்சினை என்றதும் அங்குள்ள மக்களுக்காக அமெரிக்காவும், மற்ற நாடுகளும் ஓடோடிச் சென்றன. ஆனால் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது எந்த நாடும் கண்டு கொள்ளவில்லை. நம் தமிழ் சொந்தம் நாதியற்று நின்றது.

இந்தியாவை விட்டு வெளியே சென்று மற்ற நாடுகளிடம் தமிழர்களுக்காக ஆதரவு கேட்டால் இந்தியா என்ன சொல்கிறது என்று நம்மை கேட்பார்கள். இந்தியாவிற்குள் மற்ற மாநில முதல்வர்களை சந்தித்து ஆதரவு கேட்டால் உங்கள் முதல்வர் என்ன சொல்கிறார்? என்று நம்மிடம் கேட்பார்கள். தமிழ் இன தலைவர் கருணாநிதி ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தனி ஈழத்திற்கு போராடுவேன்  என்று சொன்ன ஜெயலலிதா தற்போது அவர்களின் நலனுக்காக சரித்திரம் முக்கியத்துவம் பெற்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். அப்படிப்பட்ட ஜெயலலிதாவை நாம் பாராட்டாமல் வேறு யார் பாராட்டுவது.

சட்டமன்ற தேர்தலின் போது இரட்டை இலை துளிர்த்தால் ஈழம் மலரும் என்று நான் பிரசாரம் செய்தேன். பலர் என்னை பார்த்து ஏளனம் செய்தார்கள். இன்று நாம் நினைத்தது போல, ஜெயலலிதா முதல்​அமைச்சராகி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார். 8 கோடி தமிழக மக்களின் பிரதிநிதியான முதல்​அமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தை ஒரு அமைச்சரை வைத்து முன்மொழிய சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஈழத் தமிழர்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் கருதி சட்டமன்றத்தில் அவரே தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார். துணிச்சல் மிக்க பெண்மணி அவர். இதற்காக நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர். அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெறுமைப்பட வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்த போதும் ஜெயலலிதா வற்புறுத்தினார். இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதற்காக அவர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் துணை நிற்போம். அவரது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த என் தம்பிமார்கள் அனைவரும் அணி திரள வேண்டும். காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை போன்று பல்வேறு பிரச்சினைகள் இன்று நாட்டில் உள்ளன. இவையெல்லாம் தமிழக காங்கிரசாரின் கண்ணுக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணுடன் என்னை தொடர்புபடுத்தி பேசியதை பெரிதாக பார்க்கிறார்கள். அதற்காக போஸ்டர் அடித்து ஒட்டும் அவர்கள் நதி நீnullர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு முன் வர வேண்டும் என்று போஸ்டர் ஒட்ட வேண்டியதுதானே. கூடுதலாக 10 நாட்கள் பிரசாரத்துக்கு நேரம் இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சியினரை நாம் கூண்டோடு வீழ்த்தியிருக்கலாம் 5 இடங்களில் கூட வெற்றி கிடைக்காமல் போயிருக்கும். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மத்திய அரசு கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்த கப்பலில் ஒரு தமிழன் கூட ஏறமாட்டான். 6 மாத காலம் nullஉங்கள் கப்பலை இயக்கி காட்டுங்கள் பார்க்கலாம். அப்படி நடந்து விட்டால் தூத்துக்குடி துறைமுகத்தில் நான் தூக்கில் தொங்கவும் தயாராக உள்ளேன். இலங்கை தமிழர் பிரச்சினையில் இன்று ஜெயலலிதா நாடகம் ஆடுவதாக கருணாநிதி கூறுகிறார். இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்தவர் அவர் இது போன்ற ஒரு நாடகத்தை கூட அவர் நடத்திக் காட்டவில்லையே தமிழக முதல்​அமைச்சர் ஜெயலலிதாவை பொறுத்தவரை எந்த காரியத்தில் இறங்கினாலும் அதனை நிறைவேற்றாமல் விடமாட்டார். தமிழ் ஈழத்தையும் அவர் பெற்றுத் தருவார்.

உங்களது நடவடிக்கைகளை யாராலும் நம்ப முடியவில்லை. நீங்கள் பயணம் செய்யும்போது மற்றவர்களுக்கு இடையூறு ஏதும் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டு அனைத்து வாகனங்களுடன் உள்ளது வாகனமும் செல்கிறது. அரசு விழாக்கள் மிக எளிமையாக, ஆடம்பரமில்லாமல் நடக்கிறது. பதவி ஏற்றதும் உங்களை தேர்ந்தெடுத்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல சொல்கிறீர்கள் உங்களது நடவடிக்கைகளை பார்த்து வாயடைத்து திகைத்து நிற்கிறார்கள்.

உங்களுக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒவ்வொருவர் உள்ளத்திலும் நீங்கள் குடியிருக்கிறீர்கள்.

நான் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி நாசகார சக்தி. அந்த கட்சியுடன் இணைந்து விடாதீர்கள். காங்கிரஸ் தயவு உங்களுக்கு தேவையில்லை. உங்களது தயவுதான் காங்கிரசுக்கு வேண்டும். நீங்கள் 146 இடத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள். இதே உறுதியுடன் இருங்கள். இன்னும் 2 ஆண்டுகளில் நடைபெறும் பார்லிமெண்ட் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவீர்கள். டெல்லி சென்றீர்கள். சோனியா காந்தியை சந்திக்கவில்லை. அந்த துணிச்சல் உங்களுக்கு மட்டும்தான் உண்டு. வீரமங்கை வேலு நாச்சியாரை உங்கள் உருவத்தில் பார்க்கிறோம். லட்சியத்தில் உறுதியுடன் இருங்கள். உங்கள் படைக்கு நாங்கள் வலிமை சேர்ப்போம். நாங்கள் எந்தவித பிரதி பலனையும் எதிர்பார்த்து இதனை சொல்லவில்லை. தமிழின மக்கள் உங்களை நம்புகிறார்கள். மக்கள் உங்களுக்கு வெற்றி தேடி தருவார்கள்.

இதற்காக இறுதிவரை நாங்கள் உங்களுக்கு உறு துணையாக இருப்போம். இவ்வாறு சீமான் பேசினார். இந்தக் கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், டைரக்டர்கள் மணிவண்ணன், ஆர்.கே. செல்வமணி, பேராசிரியர் தீரன், அற்புதம்மாள், கலைக்கோட்டுதயம், அன்பு தென்னரசு கோட்டைகுமார், தடா சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க மற்ற மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற முதல்​அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, 2 முறை மழை பெய்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் கூட்டத்தினர் சீமானின் பேச்சை கேட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்