முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபா பணம் கொள்ளை போகிறதா? பஸ்சில் கடத்தப்பட்ட ரூ.5 கோடி சிக்கியது

திங்கட்கிழமை, 20 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புட்டபர்த்தி,ஜூன்.- 21 - புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து காரில் கடத்தப்பட்ட ரூ. 35 லட்சம் முதலில் பிடிபட்டது. அதற்கு மறுநாளே பஸ்சில் கடத்தப்பட்ட ரூ. 5 கோடியை போலசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் சத்திய சாய்பாபா பிரசாந்தி நிலையம் என்ற பெயரில் ஆசிரமத்தை நடத்தி வந்தார். அத்துடன் சாய்பாபா அறக்கட்டளையையும் நிறுவினார். இந்த அறக்கட்டளை மூலம் ஏராளமான தொண்டுகளை அவர் செய்து வந்தார். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உட்பட மக்களுக்கு பயன்படும் நிறுவனங்களும் தொடங்கப்பட்டன. சாய்பாபாவுக்கு உலகம் முழுவதும் முக்கிய நாடுகளில் பக்தர்கள் உள்ளனர். இவர்கள் பெரும் தொகையை நன்கொடையாகவும் அளித்தனர்.
ஆகவே சத்திய சாய்பாபா அறக்கட்டளைக்கு ரூ. 1.50 லட்சம் கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன் சாய்பாபாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆசிரமத்தில் உள்ள மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த ஏப்ரல் மாதம் மரணமடைந்தார்.
ஆசிரமத்தில் உள்ள தனி அறையில் சாய்பாபா தங்கி வந்தார். அந்த அறைக்கு யஜூர்மந்திர் என்று பெயர். இங்கு ஏராளமான அளவில் தங்க, வைர நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றையும் வைத்திருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் அதை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதன் சாவி புட்டபர்த்தியில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் அந்த வங்கியின் மேலாளர்கள் முன்னிலையில் யஜூர்மந்திர் அறை திறக்கப்பட்டது. அங்கு 98 கிலோ தங்கம், 305 கிலோ வெள்ளி மற்றும்  ரூ. 11. 58 கோடி பணம் ஆகியவை இருந்தன.
மேற்கண்ட பொருட்களை எண்ணும் போது பொதுமக்களோ அல்லது பத்திரிக்கையாளர்களோ அனுமதிக்கப்படவில்லை. சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இரவில் புட்டபர்த்திக்கு அருகே உள்ள கொடி கொண்டா என்ற இடத்தில் கார் ஒன்றை போலீசார் மடக்கினர். அதில் ரூ. 35 லட்சம் பண கட்டுக்கள் இருந்தன. அந்த காரில் டிரைவர் மட்டுமே இருந்தார். அவரது பெயர் ஹரீஸ் நந்தா செட்டி. கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள அச்சரக்காடு என்ற ஊரை சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள தனியார் கட்டுமான கம்பெனி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது இந்த ரூ. 35 லட்சத்தையும், சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர் ஒருவரிடம் டிரைவராக வேலை செய்யும் சேகர் என்பவர் கொடுத்ததாகவும் இதை பெங்களூரில் வசிக்கும் ஒருவரிடம் ஒப்படைக்குமாறும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஹரீஷ்நந்தா செட்டி வேலை செய்யும் கட்டுமான கம்பெனிதான் சாய்பாபா ஆசிரமத்தின் சமாதி கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் கூறிய தகவலையடுத்து அறக்கட்டளை டிரைவர் சேகரை போலீசார் கைது செய்தார்கள். இந்த சம்பவத்துக்கு மறுநாளிலேயே மேலும் ரூ. 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புட்டபர்த்தியில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூருக்கு அம்மாநில அரசு பஸ் ஒன்று நேற்று புறப்பட்டது. இது வோல்வோ சொகுசு பஸ் ஆகும். புட்டபர்த்தியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கொத்தசெருவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது போலீசார் அதை மடக்கினார்கள்.
அந்த பஸ்சை சோதனையிட்ட போது 2 சாக்கு மூட்டைகள் இருந்தன. அவற்றை அவிழ்த்து பார்த்த போது 2 சாக்குகளிலும் மொத்தம் ரூ. 5 கோடிக்கு மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. ரூ. 10 கோடி வரை இருக்கலாம் என்று இன்னொரு தகவல் கூறுகிறது. இவற்றை 2 பேர் கடத்தி சென்றார்கள். அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த வர்த்தகர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சாய்பாபா அறக்கட்டளையின் வசம் கோடிக் கணக்கில் சொத்துக்களும், பணமும் இருக்கின்றன. அவர் இறந்த பிறகு அவற்றை கொள்ளையடிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அதனால்தான் சாய்பாபாவின் யஜூர் மந்திர் அறையை திறக்க வேண்டும் என்று ஆந்திராவை சேர்ந்த 2 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் பிறகுதான் அந்த அறை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் அடுத்தடுத்து 2 நாட்களில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு ரூ. 35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பின்னர் நிர்வாகி ரத்னாகர் கூறுகையில், அந்த பணத்துக்கும், அறக்கட்டளை நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். அப்படியானால் பெருந்தொகை பணத்தை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏதாவது ஒரு வங்கியில் போட்டு அதை தேவைப்படும் இடத்தில் உள்ள வங்கியில் பெற்றுக் கொள்ளலாமே என்ற வாதத்தை போலீசார் முன்வைக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்