முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்தானம் செய்யுங்கள்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, ஜூன்.- 21 - இளைய தளபதி விஜய்யின் பிறந்த தினம் ஜூன் 22-ம் தேதி வருகிறது. அவர் தன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு மக்கள் இயக்கத்தினருக்கும் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- என் உயிருக்கும் மேலான அன்பு ரசிகர், ரசிகைகளே, மக்கள் இயக்கத் தோழர்களே, என்னை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்கள், எனது பிறந்த நாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தானத்தில் சிறந்த தானம் கண் தானம். நாம் மறைந்தபின் நமது கண்களை இன்னொருவருக்குக் கொடுப்பதால் மீண்டும் இந்த மண்ணில் நாம் வாழும் பாக்கியம் கிடைக்கிறது.
நாம் மற்றவர்களுக்கு கண் பார்வை கொடுப்பதன் மூலம் நாம் இறந்த பிறகும் உயிரோடு வாழ்கிறோம் என்ற பெருமை நமக்கு கிடைக்கிறது. ஆகவே மண்ணுக்குள் மக்கிப் போகின்ற கண்கள் பார்வையற்ற ஒருவருக்கு ஒளி கிடைக்க உதவட்டும். மீண்டும் இந்த உலகில் பிறப்பெடுத்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கட்டும். எனது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 100 பேர் சென்னையில் என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண் தானம் செய்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.
உயிருக்குப் போராடி சாகும் தருவாயில் எங்கோ இருக்கும் ஒரு சகோதரனை, சகோதரியை நம் ரத்தத்தின் மூலம் காப்பாற்ற முடியும். நம் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 2 இலட்சம் யூனிட்கள் ரத்தம் தேவைப்படுகிறது. இப்போது நம்மிடம் இருப்பது 40,000 யூனிட்கள் தான் என்கிறது புள்ளி விவரம். அதனால் ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். நீங்கள் செய்யும் ரத்ததானம் மக்களிடையே பேசப்பட்டு பரவலாகி ரத்ததான விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தவேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
தானம் செய்வது மகா புண்ணியம். ஏழை மாணவ-மாணவிகள் பத்து பேருக்கு பேனா, பென்சில் வாங்கிக் கொடுத்தாலும் அதுவும் ஒரு சமூகப் பணிதான். நம்மால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு, முதியவர்களுக்கு உதவி செய்யலாம். ஏழைப் பெண்களுக்கு தையல் மெஷின் வாங்கிக் கொடுத்து அவர்கள் சொந்தக்காலில் நிற்க உதவலாம். மற்றவர்களை சந்தோஷப்படுத்தி ஆத்ம திருப்தி அடைவது ஒரு மிகப்பெரிய சந்தோஷமாகும்.
இலலாமை இல்லாத சமுதாயம் காண நாம் தொடர்ந்து அயராது களப்பணி ஆற்றி, நம் மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்யவேண்டும் என அன்புடன் உங்களை அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்