முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் அ.தி.மு.க. பொறுப்பாளர்களுக்கு மோதிரங்கள்-கெடிகாரங்கள்- ஜெயலலிதா வழங்கினார்

திங்கட்கிழமை, 20 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 21 - ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றுக்கொடுத்த பகுதி - ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மோதிரங்களையும், கைக்கெடிகாரங்களையும் வழங்கினார். ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி வந்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, இரண்டாம் நாளான நேற்று (திங்கட் கிழமை), அந்தநல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, திருச்சியில் தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் போது, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி மற்றும் ஒன்றியம் வாரியாக அதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுத்த முதல் மூன்று வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த கட்சி பொறுப்பாளர்களையும், உறுப்பினர்களையும் நேரில் வரவழைத்து, அவர்களுக்கு முறையே ஒரு பவுன், முக்கால் பவுன், அரை பவுன் தங்க மோதிரங்களையும்; உறுப்பினர்களுக்கு கைக்கடிகாரங்களையும் பரிசாக வழங்கி, அவர்களுடைய சேவையை வெகுவாக பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
இதன்படி,  பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுடைய திருக்கரங்களால், ஸ்ரீரங்கம் பகுதியில் முதலிடத்தை பெற்ற 64/2 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளர் ஆர். லட்சுமிநாராயணன்  ஒரு பவுன் தங்க மோதிரத்தையும், இரண்டாவது இடத்தைப் பெற்ற 68/2 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், ஸ்ரீரங்கம் பகுதி வட்ட பாகச் செயலாளருமான  எம்.கே. முத்துகிருஷ்ணன் முக்கால் பவுன் தங்க மோதிரத்தையும், மூன்றாவது இடத்தைப் பெற்ற 70/2 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், ஸ்ரீரங்கம் பகுதி 2​வது வட்ட  செயலாளருமான கா.திருவேங்கடன்  அரை பவுன் தங்க மோதிரத்தையும், மேற்படி வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த இதர உறுப்பினர்கள் கைக்கடிகாரங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதே போல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடைய திருக்கரங்களால், மணிகண்டம் ஒன்றியத்தில் முதலிடத்தை பெற்ற 186 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், தாயனூர் ஊராட்சி  செயலாளருமான கே. இன்பராஜ்  ஒரு பவுன் தங்க மோதிரத்தையும், இரண்டாவது இடத்தைப் பெற்ற 155 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், அதவத்தூர் ஊராட்சி செயலாளருமான  ஏ. முத்துவீரன்  முக்கால் பவுன் தங்க மோதிரத்தையும், மூன்றாவது இடத்தைப் பெற்ற 156 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், பள்ளக்காடு கிளை செயலாளருமான பி. திருமூர்த்தி  அரை பவுன் தங்க மோதிரத்தையும், மேற்படி வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த இதர உறுப்பினர்கள் கைக்கடிகாரங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்