முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, ஜூன்.- 22 - இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய  பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு   நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர்  ஜெயலலிதா பிரதமருக்கு அனுப்பியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கை கடற்பரப்பில் எதிர்பாராதவிதமாக நுழைந்த தமிழக மீனவர்கள் 23 பேரை  திங்களன்று இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் காவல் நிலையம் கொண்டு சென்றதாக எனது  கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மே 2011-ல் படகுடன் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை கேய்ட்ஸ் நீதிமன்றத்தினால் காவலில் வைக்கப்பட்டது குறித்து எனது அரசு ஏற்கனவே தங்களிடம்  புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இம்மாதம் (ஜூன் 7) நான் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு பதிலளித்து நீங்கள் சென்ற 15-ந்தேதி எழுதிய கடிதத்தில், இந்த பிரச்சனை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த மீனவர்கள் சென்ற 17-ந்தேதி  விடுதலை செய்யப்பட்டனர். அந்த பிரச்சனையில் தாங்கள் தலையிட்டதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
பாக். வளைகுடாவில்,  ராமேஸ்வரம் கடற்கரை அருகே சர்வதேச கடல் எல்லைக்கோட்டை கடந்து வந்ததாக தமிழக மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு,  சிறையிலடைப்பது மிகவும் கவலையளிக்கிறது.
இது தமிழக மீனவர்களிடையே பெரும் பதற்றத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்துகிறது. நான் புதுடெல்லியில் தங்களை சந்தித்தபோது (14.6.11) இந்த வேதனை அளிக்கும் விஷயம் குறித்து விவாதித்தேன். தேசிய பாதுகாப்பு அலோசகர் சிவசங்கர் மேனன் கொழும்பு செல்லும் வழியில் கடந்த 9-ந்தேதி  என்னை சந்தித்தபோதும் இதுகுறித்து விவாதித்தேன். மீண்டும் 14-ந்தேதியும் நாங்கள் பேசினோம்.
இந்நிலையில் மீண்டும் இலங்கை கடற்படையினர் 23 தமிழக மீனவர்களை 5 படகுகளுடன் கைது செய்து, சிறையிலடைத்துள்ளனர். தாங்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்