முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வரைவு குழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜுன் - 22 - லோக்பால் மசோதா தொடர்பான கூட்டுக் குழுவின் இறுதிக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் கருத்து வேறுபாடு தொடர்ந்து நீடிக்கிறது. ஊழலுக்கு எதிராக மத்திய அரசு லோக்பால் மசோதா ஒன்றை  கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த லோக்பால் மசோதாவை தயாரிப்பதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 10 பேர் கொண்ட கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். ஏற்கனவே இந்த குழு 8 முறை கூடி விவாதித்துள்ளது. ஆனால் இந்த 8 கூட்டங்களிலும் ஒருமித்த கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.
இந்த லோக்பால் விசாரணை அதிகார வரம்பிற்குள் பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரி வருகின்றனர். மேலும் இந்த அதிகார வரம்பிற்குள் சி.பி.ஐ.யையும் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு தயங்குகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று நடந்த கூட்டுக் குழுவின் இறுதிக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட லோக்பால் மசோதா சமூக ஆர்வலர்களிடமும், சமூக ஆர்வலர்கள் தயாரித்த லோக்பால் மசோதா மத்திய அமைச்சர்களிடமும் பரிமாறிக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த லோக்பால் மசோதா குறித்து இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுக் குழுவின் தலைவர் பிரணாப் முகர்ஜி, கூட்டுக் குழுவில் கூறப்பட்டுள்ள யோசனைகள் மத்திய அமைச்சரவை குழு முன்பு விரைவில் வைக்கப்படும் என்றும் அந்த குழுவில் விவாதித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அதன் பிறகு லோக்பால் மசோதா வருகிற  மழைக்கால கூட்டத் தொடரில்  பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்