முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் இடஒதுக்கீடு மதோசா இன்று அனைத்துக் கட்சிக்கூட்டம்-மீராகுமார் ஏற்பாடு

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜூன். - 22 - மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஏற்பாடு செய்துள்ளார். இன்றாவது இந்த விஷயத்தில் நல்ல முடிவு ஏற்படுமா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் செப்டம்பர் முதல் வாரம் வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. இந்த கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா போன்ற மசோதாக்கள் குறித்து விவாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் குறித்தும் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்தும் இந்த கூட்டத் தொடரில் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதா கொண்டு வரப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் இந்த மசோதா இதுவரை நிறைவேறவில்லை. இந்த மசோதா நிறைவேறாமல் இருப்பதற்கு காரணகர்த்தாக்களாக இருப்பவர்கள் லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் போன்றவர்கள்தான்.
இவர்கள்தான் இந்த மசோதா நிறைவேறாமல் இருக்கும் வகையில் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். இந்த மசோதாவில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று இவர்கள் அடம் பிடிப்பதால்தான் இந்த மசோதாவும் ஜடமாகவே கிடக்கிறது. ஒவ்வொரு முறை பாராளுமன்றம் கூடும் போதும் இந்த மசோதா குறித்து விவாதம் நடைபெறும். ஆனால் மசோதா மட்டும் நிறைவேறாது. இதை எதிர்த்து பெண் எம்.பிக்கள் கூக்குரலிட்டும் கூட இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று சபாநாயகர் மீராகுமார் விரும்புகிறார். அதையடுத்து இந்த மசோதா விஷயத்தில் ஒருமித்த கருத்தை அரசியல் கட்சிகளிடையே ஏற்படுத்துவதற்காக இன்று அனைத்து கட்சி கூட்டத்தை அவர் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த மசோதா நிறைவேற ஒத்துழைக்குமாறு தலைவர்களை சபாநாயகர் மீராகுமார் கேட்டுக் கொள்வார் எனத் தெரிகிறது. ஆனால் அவரது முயற்சி வெற்றி பெறுமா என்பதுதான் தெரியவில்லை. நாட்டின் ஜனாதிபதியாகஒரு பெண் ( பிரதீபா) இருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக ஒரு பெண்( சோனியா) இருக்கிறார். பாராளுமன்ற சபாநாயகராகவும் ஒரு பெண்(மீராகுமார்) இருக்கிறார். இத்தனை பேரும் பெண்களாகவே இருக்கிறார்கள். அப்படி இருந்தும் கூட மகளிர் மசோதா இதுவரை நிறைவேறவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்