முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

புதன்கிழமை, 22 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம்,ஜூன்.- 22 - கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை சிங்கள கடற்படையினர் சிறை பிடித்து சென்ற சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீனவ குடும்பங்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி உள்ளன. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது, அவர்களை படகுகளை சேதப்படுத்துவது, பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. மேலும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வதும் சர்வசாதாரணமாகி விட்டது. இது குறித்து தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. மேலும் மத்திய அரசும் இது பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் 800 விசைப்படகுகளில் இந்திய - இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அவற்றில் பெரும்பாலான படகுகள் நேற்று காலை கரை திரும்பி விட்டன. இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த அம்புசம், இருளாண்டி, பால்ராஜ், பொன்னழகு, ஞானசேகரன் ஆகியோரின் படகுகள் மட்டும் கரை திரும்பவில்லை. இது குறித்து விசாரித்த போது, ராமேஸ்வரத்தை சேர்ந்த படகுகள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அதில் இருந்த 23 மீனவர்களையும் அப்பகுதிக்கு வந்த சிங்கள கடற்படையினர் அத்துமீறி கடல் எல்லையை தாண்டியதாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்து சென்றதாகவும், அவர்கள் இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றதாகவும் தெரியவந்தது.  
இப்படகுகளில் ராமேஸ்வரத்தை சேர்ந்த விஜயன், ஈஸ்வரன், செந்தில், முத்துக்காளை, ராமசாமி, சேகர் உள்ளிட்ட 23 மீனவர்கள் இருந்தனர். பின்னர் 23 மீனவர்களும் மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிகிறது.  இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயல் தமிழக மீனவர்களிடையே குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் மீனவ குடும்பங்களும் தங்களது நிலை குறித்து பெரிதும் கவலையடைந்துள்ளன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் அனைத்து மீனவ சங்கங்களின் சார்பில் அவசர கூட்டம் நடைபெற்றது. அதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மீட்கப்படும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்வதில்லை என்று முடிவெடுக்கப்பட்டதாக ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் போஸ் தெரிவித்தார். அது மட்டுமல்லாது, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மீனவ குடும்பங்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்