முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்கட்டமாக மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி தமிழக அரசு ஆலோசனை

புதன்கிழமை, 22 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் - 21 - தமிழக அரசு ஏழை பெண்களுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக பல்வேறு  நிறுவனங்களுடன் தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஏழைப் பெண்களுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வருகிற செப்டம்பர் 15 ம்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று இவை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்கட்டமாக 25 லட்சம் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் மிக்ஸி ரூ. 500 கோடிக்கும், கிரைண்டர் ரூ. 600 கோடிக்கும், மின்விசிறி ரூ. 250 கோடிக்கும் வாங்குவதற்கு உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்கள் இதற்காக டெண்டர் போட்டுள்ளன. இந்த டெண்டர்கள் அடுத்த மாதம் 11 தேதி  திறக்கப்படுகின்றன. இதனிடையே தயாரிப்பு நிறுவனங்களுடன் அரசு  நேற்று கலந்தாலோசனை நடத்தியது. இதில் 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிபர்கள் கலந்துகொண்டனர். தயாரிப்பு குறித்து நிறுவனங்கள் கேட்ட சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். அனைத்து பொருட்களையும் மிகவும் தரமானதாக வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. மிக்ஸியுடன் 2 ஜார்கள் வழங்கப்படுகிறது. இதில் ஒன்று 1 லிட்டர் கொள்ளளவும் மற்றொன்று 400 மில்லி கொள்ளளவு கொண்டதாகவும் இருக்கும். ஜார்கள் சேலம் ஸ்டீல் மூலம்  தயாரிக்கப்பட வேண்டும். மிக்ஸியின் திறன் 550 வாட் இருக்க வேண்டும். கிரைண்டர் 2 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும். அதனுடைய ட்ரம் சேலம் ஸ்டீலில் இருக்க வேண்டும். இதன் திறன் 150 வாட்டாக இருக்க வேண்டும். மின்விசிறி டேபிள் ஃபேனாக வழங்கப்படும். அனைத்து பொருட்களும் இரண்டு வருட உத்தரவாதத்துடன் வழங்கப்பட வேண்டும். 

மேலும் ஒவ்வொரு நிறுவனத்தினுடைய சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் கேட்கப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல்  மதியம் 1.30 மணிவரை அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசனை நடைபெற்றது. மிக்சி மற்றும் மின் விசிறிக்கு டெல்லி மற்றும் மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். கிரைண்டருக்கு கோவையில் இருந்து அதிக அளவில் நிறுவனங்கள் கலந்துகொண்டன.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்