முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதி 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப்

புதன்கிழமை, 22 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 23 ​- அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்வர் ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே 20 கிலோ இலவச அரிசி திட்டம் உள்பட 7 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். அடுத்த கட்டமாக இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கவும் மாணவ​மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார். இவற்றை கொள்முதல் செய்ய டெண்டர் விடும் பணி நடந்து வருகிறது. பிளஸ்​1, பிளஸ்​2 மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு முதல் கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இதற்காக சர்வதேச அளவில் டெண்டர் அறிவிப்பை எல்காட் நிறுவனம் வெளியிட்டிருந்தது. டெண்டரில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கு நேற்று நந்தனம் எல்காட் அலுவலகத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் எச்.சி.எல்., விப்ரோ, எச்.வி. சோனி, பிரனோவா, டெல், ஈசர், ஜெனித், சாம்சங், எல்.ஜி., இன்டெல் உள்பட 85-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நேற்று பங்கேற்றன. ஆர்டரை பெற்றுவிட ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு விளக்கம் கேட்டனர். கூட்டத்தில் எல்காட் நிறுவன நிர்வாக இயக்குனர் அதுல் ஆனந்த் டெண்டர் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
அவருடன் உயர் கல்வித்துறை இணைச் செயலாளர் உமா மகேஸ்வரி, ஐ.ஐ.டி., பேராசிரியர் ஜெயப்பிரகாஷ், அண்ணா பல்கலைக்கழக இயக்குனர் ரைமன் உத்திரை ராஜ், நிக் அதிகாரிகள் மணிவண்ணன், கிருஷ்ண மூர்த்தி ஆகியோரும் உடன் இருந்து விளக்கம் அளித்தனர்.
டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் ரூ.20 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும். லேப்-டாப்பில் தமிழ், ஆங்கிலம் சாப்ட்வேர் இடம் பெற்றிருக்க வேண்டும். பேட்டரியுடன் சேர்த்து லேப்-டாப் எடை 2 கிலோ 700 கிராம் அளவிற்குள் இருக்கவேண்டும். பழுது ஏற்பட்டால் சர்வீஸ் செய்ய தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர் வைத்திருக்க வேண்டும். லேப்-டாப்புக்கு 3 வருட உத்தரவாதம், பேட்டரிக்கு 1 வருட உத்தரவாதமும் தரவேண்டும் என்றும் விளக்கினர்.
டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் இந்த மாதத்திற்குள் மாதிரி லேப்-டாப்பை தயாரித்து காட்டவேண்டும். லேப்-டாப்புக்கு வழங்கும் பேட்டரி 6 எண்ணிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். கேமரா, பவர் கேபிள், அடால்டர், சார்ஜர் ஆகியவையும் தரமானதாக தயாரித்து வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. 2 ஜி.பி. ரேம், 320 ஜி.பி. ஹார்டு டிஸ்க் இடம் பெற வேண்டும், வின்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது வினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் முறை அதில் இருக்க வேண்டும். கல்வி தொடர்பான சாப்ட்வேர்கள், டேட்டோ பேஸ் புரோகிராம் உள்பட பல வசதிகளும் அதில் இருக்கவேண்டும் என்று கூறினர். அடுத்த மாதம் 11-ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு யாருக்கு அனுமதி என்பது தெரிவிக்கப்படும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் விளக்கம் கேட்கும்போது சீனா, தைவானில் இருந்து லேப்டாப்புகளை இறக்குமதி செய்து தரலாமா என்றனர். தயாரிப்பு கம்பெனியின் பெயரை லேப்-டாப்பில் இடம் பெறச் செய்யலாமா என்றும் கேட்டனர். இதற்கு எல்காட் நிர்வாக இயக்குனர் அதுல் ஆனந்த் பதில் அளிக்கையில், எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் லேப்டாப்பை வரவழைக்கலாம். ஆனால் அதில் தயாரிப்பு கம்பெனி பெயர் இடம் பெறக்கூடாது. தமிழக அரசு சின்னம்தான் அதில் இடம் பெற வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்