காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி பேச்சு - எரிச்சலில் கருணாநிதி

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      அரசியல்
karu3

 

சென்னை, பிப்.27 - காங்கிரஸ் தி.மு.க. பேச்சு வார்த்தை இழுபறியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெளியில் சிரித்தமுகத்துடன் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறோம் என்று இரண்டு தரப்பும் கூறினாலும் உண்மையில் உள்ளே பெரும் குத்துவெட்டு நடந்து கொண்டுதான் உள்ளது. மறுபுறம் தே.மு.தி.க, அ.தி.மு.க. கூட்டணிக்குள் வரக்கூடாது என்பதற்காக உளவுத்துறை மற்றும் ஜால்ராக்கள் மூலம் வெளியே பரப்பிவிடப்பட்ட பொய்க்கருத்துக்கள் புஸ்வாணமாகி அ.தி.மு.க. தே.மு.தி.க. பேச்சு வார்த்தை துவங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தரப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டாலும் அது வெறும பொம்மை குழுதான் என்பது அனைவருக்கும் தெரியும். முக்கிய சூத்ரதாரி ராகுல்காந்தி என்பதுதான் தற்போது தி.மு.க.வினருக்கு கடும் எரிச்சலை தாக்கூடிய விவகாரம். கருணாநிதிக்கு சோனியாகாந்தி அப்பாயிண்ட்மெண்ட் தராமல் டெல்லியில் இழுத்தடித்தற்கு ராகுல்காந்தியும் பேச்சில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தான் என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. அந்த சந்திப்பில் ராகுல்காந்தி மட்டுமே பேசியதாகவும் 78 தொகுதிகளின் பெயர் பட்டியலை வாசித்த ராகுல்காந்தி காங்கிரஸின் செயல் திட்டபணிகளை கூறியதாகவும் கூறப்படுகிறது. தற்போது காங்கிரஸின் பிரதான நிபந்தனையே ஒரு எம்.பி தொகுதிக்கு 2 எம்.எல்.ஏ தொகுதி வீதம் 78 தொகுதிகள் துணை முதல்வர், காங்கிரஸ் தலைமையில் ஸ்டியரிங் கமிட்டி 5 முக்கிய மந்திரி பதவிகள் என்ற காங்கிரஸின் நிபந்தனையை கேட்ட தி.மு.க. வினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

அதன் வெளிப்பாடே நேற்று முன்தினம் கூட்டணி பேச்சு வார்த்தைப்பற்றி பேசிய கருணாநிதி 234 தொகுதிகளையும் காங்கிஸார் கேட்கிறார்கள் என்று நிருபர்களிடம் எறிந்துவிழுந்தார். தி.மு.க. தரப்பில் கூடுதலாக 55 முதல் 60 சீட்டுகள் வரை தரமுடியும் என்று கூறினாலும் காங்கிரஸ் அதை ஏற்று கொள்வதாக இல்லை. தங்களை கேட்காமல் பா.ம.க.வை சேர்ந்ததுமல்லாமல் ஒரு எம்.பி கூட ஜெயக்காத பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுங்கியுள்ள தி.மு.க.வை காங்கிரஸ் மன்னிக்க தயாராக இல்லை. கூட்டணியில்  பலம் பொறுந்திய இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸுசுக்கு கூடுதல் இடங்களை  ஒதுக்கித்தான் தீரவேண்டும்  என்று சோனியாவும் ராகுலும் உறுதியாக உள்ளனர். மேலும் தி.மு.க.வை மெஜாரிட்டி இல்லாத அளவுக்கு தொகுதிகளில் நிற்க்கவைத்து அதன் மூலம் ஆதிக்கம் செலுத்தலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸை பகைத்து கொண்டு வெளியேறினால் தலைதப்பாது என்று தி.மு.க.வுக்கு  பிரச்சனை என்பது கருணாநிதிக்கு தெரியும். மேலும் மத்தியில் அதிகாரத்தில்  இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்தித்தால் செல்லாக்காசாகி விடுவோம் என்பதும் கருணாநிதிக்கு தெரிந்திருப்பதால் இருதலை கொள்ளி எறுப்புபோல தவித்து கொண்டிருக்கிறார்.

மறுபுறம் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதும் கேள்வி குறியாக உள்ளது. திருமாவளவனுக்கு பலவகைகளில் உதவி வரும் வெளிநாட்டு வாழ்தமிழர்கள் காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பதா என்று நெருக்குதல் தருவதால் அணிமாறும் உத்தேசத்தில் திருமாவளவன் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்போது காங்கிரஸ் கேட்பது ஏதோ புதிதாக கேட்கும் விஷயமல்ல 1980 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாதிக்கு பாதி இடம் கொடுத்து நின்றவர்தானே கருணாநிதி இப்ப ஏன் தயங்குகிறார் என்று காங்கிரஸ் தரப்பில் கேட்கின்றனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாறிகிடக்கும் தி.மு.க.வை வேறு தூக்கி சுமக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பினர் பேசிக் கொள்கின்றனர்.

ஐவர் குழுவினருடன் என்ன பேசுவது நான் டெல்லிக்கே நேராக பேசுவேன் என்று மீண்டும் சோனியாவிடம் பேசுவதற்காக நல்ல சிக்னல் கிடைக்கும் என்று தன்மகள் கனிமொழியையும் டி.ஆர்.பாலுவையும் அனுப்பி சோனியாவிடம் கருணாநிதி பேசி பார்த்தார். ஆனால் எதுவாக இருந்தாலும் ஐவர் குழு மூலமே எங்கள் தரப்பு கருத்துக்களை கூறுகிறோம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் பொறியில் அகப்பட்ட எலிபோல மாட்டிக்கொண்டு கருணாநிதி விழிக்கிறார். கருணாநிதியின் ராஜதந்திரம் எல்லாம் டெல்லியில் எடுபடவே இல்லை. என்ன செய்வது ஸ்பெக்ட்ராம் பணமும் வேண்டும் பழைய அதிகாரமும்   வேண்டும் என்றால் நடக்குமா கருணாநிதி மறந்துபோன ஒரு வசனம் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. கருணாநிதி தற்போது உள்ள நிலையில் தன் குடும்பத்தை காப்பாற்ற கழகத்தை அடகுவைத்துதான் தீரவேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: