மக்களை மிரட்டும் தங்கத்தின் விலை...!

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜுன் 24 - இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையேற்றம் நிலத்தின் விலையைவிடவும், பங்குச் சந்தை வளர்ச்சியைவிடவும் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 160 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்களது தங்க கையிருப்பை அதிகரித்து வருவதாலும், தேவைக்கு ஏற்ப தங்கத்தின் உற்பத்தி இல்லை என்பதாலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் நிலத்தின் விலை மற்றும் பங்குச் சந்தை வளர்ச்சியைவிடவும் தங்கத்தின் விலை தான் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது.  இதனால் இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். 

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால்,  அந்த தங்கத்தின் மதிப்பு தற்போது ரூ. 2.60 லட்சமாகும். அதாவது ஆண்டுக்கு 32 சதவீதமாக தங்கத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பல்வேறு நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகளும்  தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளன. இந்த 3 மாதங்களில் மட்டும் இந்த வங்கிகள் 129 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். 

தங்கத்தின் விலை இப்படி கன்னாபின்னாவென்று உயர்வதால் பல நாடுகள் தங்களது அன்னியச் செலாவணி கையிருப்பில் டாலர் போன்ற இதர செலாவணிகளை குறைத்துக்கொண்டு தங்கத்தை கையிருப்பில் வைப்பதை அதிகரித்து வருகின்றன. சீனாவிடம் இப்போது 3 லட்சம் கோடி டாலர் அன்னியச் செலாவணி கையிருப்பில் உள்ளது. இதில் தங்கத்தின் அளவு 1.8 சதவீதமாகும். பல்வேறு நாடுகளில் கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியில் தங்கத்தின் பங்கு 11 சதவீதம் ஆகும். இதேபோன்று சீனாவும் மற்ற நாடுகளும் மேலும் மேலும் தங்கத்தை வாங்கி குவிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை இன்னும் மேலே மேலே போகும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 

இந்நிலையில் தங்கம் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரு பவுன் விலை 17 ஆயிரத்தையும் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. இது இந்திய நடுத்தர வர்க்க மக்களின் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: