முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யை கூட்டுவதற்கு காங்கிரஸ் அரசுக்கு பயம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன். 24 - ஏராளமான பிரச்சனைகள் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு காங்கிரஸ் அரசு பயந்து ஓடுகிறது என சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இதில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி உள்பட பல்வேறு சம்பவங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இதன் நிறைவில் பாராளுமன்ற கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் அலசி ஆராயப்பட்டது. அதில் பா.ஜ.க. நல்ல முன்னேற்றம் அடைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தேர்தலில் பிரதான கட்சிகளாக மோதின. அந்த இரு கட்சிகளுக்கு இடையே தான் கடுமையான போட்டி இருந்ததால் பா.ஜ.க. மிகப்பெரிய இடத்தை பிடிக்கமுடியவில்லை. இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அடுத்த தேர்தலில் மேலும் கடுமையாக போட்டியிடுவோம். 

இந்தியாவில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலால் மே மாதத்தில் நடைபெற வேண்டிய பாராளுமன்ற கூட்டம் நடைபெறவில்லை. ராமலீலா மைதானத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்தும் மேலும் பல்வேறு சம்பவங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்ப பா.ஜ.க. தயாராக இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் அரசு பாராளுமன்றத்தை கூட்ட பயந்து ஓடுகிறது. ஏராளமான பிரச்சனைகள் குறித்து பேச வேண்டிய இந்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு கூட தெரிவிக்காமல் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்த செய்தி கூட டெலிவிஷனில் பார்த்து தான் நாங்களே தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவுக்கு பா.ஜ.க.ஆதரவளிக்கிறது. ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது, மார்ஷல்கள் கடுமையாக நடந்துகொண்டனர். லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேறும்போது இதுபோல் நடந்துகொள்ளக்கூடாது. 

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் நடவடிக்கைகள் உளவு பார்க்கப்படுவதை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து உண்மைநிலையை மத்திய அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.

லோக் பால் வரைவு மசோதா குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. அது கிடைத்தபிறகு தான் அதனுடைய சாராம்சங்கள் குறித்து விவாதிப்போம். இதனையும் பாராளுமன்றத்தில் எழுப்ப தயாராக இருக்கிறோம்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து நான் ஏற்கனவே பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சனையை எழுப்பியுள்ளேன். அடுத்து வரும் பாராளுமன்ற கூட்டத்திலும் இதனை எழுப்புவேன்.

இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்