முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல் கம்பெனி விற்கப்பட்ட விவகாரம் தயாநிதிமாறன் மீதான சி.பி.ஐ.யின் பிடி இறுகுகிறது

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஜூன்.- 25 - ஏர்செல் நிறுவனத்தை சிங்கப்பூரை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் லண்டன் சென்ற மத்திய புலனாய்வுத்துறை குழு அங்கு இரண்டு நிதித்துறை ஆலோசகர்களிடம் வாக்குமூலம் பெற்று திரும்பியுள்ளது. எனவே தயாநிதிமாறன் மீதான சி.பி.ஐ. பிடி இறுகுகிறது. ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வந்த பிரபல தொழிலதிபர் சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் தந்த வாக்குமூலத்தில் 2004- 2007-ம் ஆண்டு காலக்கட்டத்தில் தயாநிதிமாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தை அவரது நண்பரான மலேசியாவை சேர்ந்த அனந்தகிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு வற்புறுத்தினார் என்று கூறியிருந்தார். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தனது செல்போன் சேவையை விரிவாக்க உரிமம் கோரி அணுகியபோதெல்லாம் அந்த பைல்களையும் கோரிக்கைகளையும் தயாநிதிமாறன் தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும் ஏர்செல் நிறுவனத்தை அனந்தகிருஷ்ணனுக்கு விற்றே ஆக வேண்டும் என்று மிரட்டியே பணிய வைத்ததாகவும் அவ்வாறு விற்றவுடன் அந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் 14 மண்டலங்களில் செல்போன் சேவை தொடங்க தயாநிதிமாறன் உடனே லைசென்ஸ் கொடுத்ததாகவும் சிவசங்கரன் குற்றஞ்சாட்டினார். மேக்சிஸ் நிறுவனத்திற்கு இந்த உரிமம் கிடைத்தவுடன் அந்த நிறுவனம் சன் டி.வி.யின் டி.டி.எச். பிரிவில் ரூ. 600 கோடியை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் குறித்து லண்டன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த நிதி ஆலோசகர்களுக்கு முழுமையாக தெரியும் என்றும் சிவசங்கரன் கூறியிருந்தார். இதையடுத்து கடந்த 12-ம் தேதி அமுலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் லண்டன் சென்று அங்கு சிவசங்கரன் குறிப்பிட்ட நபர்களில் இரண்டு முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தியது. அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டு இக்குழு கடந்த 19-ம் தேதி இந்தியா திரும்பியது. இந்த வாக்குமூலம் தயாநிதி மாறனை பெரும் சிக்கலில் மாட்டிவிடும் என்றும் கூறப்படுகிறது. இதே போல் மற்றொரு அமுலாக்கப்பிரிவு, சி.பி.ஐ.குழு விரைவில் சிங்கப்பூர் செல்கிறது. அங்கும் சிவசங்கரனால் சுட்டிக்காட்டப்பட்ட நபர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெறும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்