முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.27 - ஸ்ரீரங்கம் அருகே உள்ள சுபயபுரம் கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலில், ஜெயலலிதாவை மகத்தான வெற்றி பெறச்செய்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 19, 20 மற்றும் 21ம் தேதிகளில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

சுற்றுப்பயணத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாக 19ம் தேதியன்று மாலை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 190 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் செயல்படுத்தப்படவுள்ள பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சுற்றுப்பயணத்தின் 2வது நாளான 20-ம் தேதியன்று அந்தநல்லூர் ஒன்றியத்தின் கீழுள்ள பெரியகருப்பூர் ஊராட்சி, சுபயபுரம் கிராமத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவிக்க சென்றபோது அந்த கிராமத்து பொது மக்கள் சுபயபுரம் கிராமத்தில் தெருவிளக்கு எரியாதது, குடிநீர் பற்றாக்குறை மற்றும் சிமெண்ட் சாலை அமைப்பது போன்ற பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அவரிடம் அளித்தனர்.

சுபயபுரம் கிராமத்து மக்களின் கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டரை அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் அந்த கிராமத்தில் உள்ள மொத்தம் 23 தெரு விளக்குகளில், செயல்படாமல் இருந்த 13 தெரு விளக்குகள் உடனடியாக பழுது நீக்கப்பட்டு, அனைத்து தெரு விளக்குகளும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. அதே போல், காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகிக்கப்படும் குழாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டு, குடிநீர் வினியோகம் சீராக்கப்பட்டது. 

மேலும், சுபயபுரம் கிராமம் பெரியசாமி வீடு முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை 200 மீட்டர் நீளத்திற்கு 3 மீட்டர் அகலத்திற்கு 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றிய பொது நிதியின் கீழ் சாலைப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சாலைப்பணி 20 நாட்களுக்குள் முடிக்கப்படும்.

அதே போல் ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் ஆர்ச் அருகில் வளைந்து நெளிந்து நின்ற மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் விடுத்த கோரிக்கை முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு தெரிய வந்தவுடன், முதலமைச்சரின் ஆணைக்கிணங்க வளைந்திருந்த மின் கம்பத்திற்கு மாற்றாக உடனடியாக புதிய மின் கம்பம் 22.6.2011 அன்று நடப்பட்டு, மின் வினியோகம் சீராக்கப்பட்டது.

மேலும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3.2 கிலோ மீட்டர் நீளமுள்ள அதவத்தூர்-கொய்யாத்தோப்பு  சாலை முடிவில், 110 மீட்டர் நீள சாலை நெடுஞ்சாலைத் துறையாலோ, ஊராட்சி ஒன்றியத்தாலோ பராமரிக்கப்படாததை சுட்டக்காட்டி `முதலமைச்சர் தொகுதியில் எல்லை படுத்தும் பாடு' என்ற தலைப்பில் பத்திரிகைகளில் வந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொதுமக்களின் நலன் கருதி இந்தச் சாலைப் பணியை உடனடியாக மேற்கொள்ள ஆணையிட்டார்.

 அதனடிப்படையில் 2 லட்ச ரூபாய் செலவில் நெடுஞ்சாலைத் துறையில் இந்த சாலைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் அனைத்தும் 4.7.2011க்குள் முடிவடைந்துவிடும்.

முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 19, 20 மற்றும் 21 ஆகிய 3 நாட்களிலும் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட மக்கள் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்