கேஸ் மீதான மாநில வரிகளை குறைக்க முகர்ஜி கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.27 - பாமர மக்களின் சுமையை குறைக்கும் வகையில் சமையல் கேஸ் மீதான மாநில வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநில முதல்வர்களுக்கு எல்லாம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் கடிதம் எழுதப் போகிறாராம். 

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை அடிக்கடி உயர்த்தி வருகிறது. சமையல் கேஸ் விலைகளையும் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. ஏழை மக்களைப் பற்றி இந்த அரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அதற்கு மாறாக எண்ணெய் நிறுவனங்களுக்கே மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு வக்காலத்து வாங்கி பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பாரதீய ஜனதா, இடதுசாரிகள் என்று எல்லா கட்சிகளுமே போராட்டம் நடத்திப் பார்த்து விட்டன. ஆனால் அந்த போராட்டத்திற்கு பலன்தான் இல்லை. இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று ஒரு வரியில் சொல்லி விட்டு பிறகு மவுனம் சாதித்து விடுகிறது மத்திய அரசு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று சொல்லிச் சொல்லியே இவர்கள் விலையை ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்படுவது என்னவோ, நாட்டு மக்கள்தான். இந்த விலை உயர்வால் லாரிகளில் சரக்கு கட்டணம் உயர்கிறது. அதன் விளைவாக காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்கிறது. தனியார் பஸ் கட்டணமும் உயர்ந்து விட்டது. இப்படி மக்கள் பல வழிகளில் அவதிப்படுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் அரசு அதைப் பற்றி எல்லாம் சிந்திப்பதே இல்லை. இத்தனைக்கும் இந்த அரசில் பல பொருளாதார மேதைகள் இருக்கிறார்கள். இருந்தும் என்ன பயன்? மக்கள் கஷ்டப்படுவதுதான் மிச்சம். இது ஒருபுறமிருக்க, விலை உயர்வுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறது மத்திய அரசு. அது மட்டுமின்றி மாநில அரசுகளுக்கு அட்வைஸ் வேறு. 

மாநில முதல்வர்கள் எல்லோரும் சமையல் கேஸ் மீதான மாநில வரிகளை குறைக்க வேண்டுமாம். இப்படி வலியுறுத்தி அவர்களுக்கு கடிதம் எழுதப் போகிறாராம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. விலை உயர்வு ஏன் செய்யப்பட்டது? என்பதை விளக்கி மாநில முதல்வர்களுக்கு இவர் கடிதம் எழுதப் போகிறார். மேலும் பாமர மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் சமையல் கேஸ் மீதான விற்பனை வரியை குறைக்க சொல்லி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதப் போகிறாராம். முன்னதாக, மத்திய அரசு கேஸ், டீசல் விலையை உயர்த்திய போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் தன் மக்களின் மீதுள்ள நன்மை கருதி சமையல் கேஸ் மீதான விற்பனை வரியை வாபஸ் பெற முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இந்த முடிவால் ஒரு சிலிண்டருக்கு ரூ. 50 என்பது இல்லாமல் ரூ. 34 தான் வசூலிக்கப்படும். அதாவது, மேற்கு வங்க மக்களுக்கு விற்பனை வரி வாபஸ் பெறப்பட்டதால் ரூ. 16 மிச்சமாகிறது. 

இதே போல் எல்லா முதல்வர்களும் வரியை குறைக்க வேண்டுமாம். அப்படி வலியுறுத்தி பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதப் போகிறாராம். காங்கிரஸ் முதல்வர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று அவர் கடிதம் எழுதப் போகிறாராம். மத்திய அரசு நேற்று முன்தினம் சமையல் கேஸ் விலையை ரூ. 50 வீதமும், ஒரு லிட்டர் டீசலை ரூ. 3 வீதமும், ஒரு லிட்டர் கெரசினை ரூ. 2 வீதம் உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு இடங்களில் விதவிதமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று இவர்கள் போராடுகிறார்கள். ஆனால் மத்திய அரசோ முடியாது என்கிறது. ஆனால் மாநில முதல்வர்கள் வரியை குறைக்க வேண்டுமாம். இது எப்படி இருக்கு!

இதை ஷேர் செய்திடுங்கள்: