முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டாவது டெஸ்டிலும் கிறிஸ்கெய்ல் புறக்கணிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கென்சிங்டன் ஓவல், ஜூன் 27 - இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்விலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஒரு டுவெண்டி -20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. இதில் டுவெண்டி - 20 போட்டியில் வெற்றிபெற்ற இளம் இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரையும் 3 - 2 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வழக்கமான கேப்டன் மகேந்திரசிங் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியிலும் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் டிராவிட் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சேர்க்கப்படவில்லை. கிறிஸ்கெய்ல் இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து தொடர் நாயகன் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு  எதிராக சில கருத்துக்களை வெளியிட்டதால் கிறிஸ் கெய்ல் ஒரு நாள் போட்டித் தொடரிலேயே சேர்க்கப்படவில்லை. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்கெயிலை இந்திய தொடரில் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தாலும் முதல் டெஸ்ட் போட்டியில் கிறிஸ்கெய்ல் சேர்க்கப்படவில்லை. தற்போது டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று முன்னலைபெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இரண்டாவது டெஸ்டிற்கான வீரர்கள் பெயரை அறிவித்துள்ளது. இந்த இரண்டாவது டெஸ்ட்டிலும்  கிறிஸ்கெய்ல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நல சங்கத்தினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தேர்வுக்குழுவினர் கிறிஸ்கெய்ல் விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேயில்லை. 

முன்னதாக நடந்த வீரர்கள் தேர்வுக்குழு கூட்டத்தில் தேர்வுக் குழு தலைவர் எர்னஸ்ட் ஹில்லையர் தெரிவிக்கையில், கடந்த சில வாரங்களுக்கு முன் கிறிஸ்கெய்ல் கிரிக்கெட் வாரியம் குறித்து மரியாதைக்குறைவான வார்த்தைகளையும், வாரியத்தை பயமுறுத்துவது போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அதனால் அவரை மீண்டும் அணியில் சேர்ப்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நலனுக்கான அசோஸியேசனுக்கும் இடையிலான மோதல் போக்கு இன்னும் ஒரு முடிவுக்கு வராமலேயே தொடர்கிறது. இதற்கிடையில் நாளை கென்சிங்டன் ஓவலில் இந்தியாவிற்கு எதிராக விளையாட இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் பெயர்களை மேற்கிந்திய தீவுகள் அணியின் மேலாளர் ரிச்சி ரிச்சர்ட்சனும், அணியின் பயிற்சியாளர் ஓடிஸ் கிப்ஸனும் அறிவித்தனர். இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் விளையாடிய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் உதவி கேப்டன் பிரண்டன் நாஷ் இரண்டாவது டெஸ்ட்டில் நீக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 1 ரன்னையும், இரண்டாவது இன்னிங்சில் 9 ரன்களையும் மட்டுமே எடுத்திருந்தார். இவருக்கு பதிலாக பார்படாஸ் தீவுகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன் எட்வர்ட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

நாளை இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பெயர்கள்:

டேரன் ஷம்மி(கேப்டன்), அட்ரியன் பரத், லெண்டில் சிம்மன்ஸ், டேரன் பிராவோ, ராம்நரேஷ் சர்வான், ஷிவ்நரைன் சந்தர்பால், மார்லன் சாமுவேல்ஸ், கார்ல்டன் பாவ்(விக்கெட் கீப்பர்), பிடல் எட்வர்ட்ஸ், ரவி ராம்பால், தேவேந்திர பிஷு, கீமர் ரோச், கிர்க் எட்வர்ட்ஸ் ஆகியோர் ஆவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்