முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை சபாநாயகர் தேர்தல் 29-ந் தேதி நடைபெறும்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூன்.27 - புதுவை சட்டசபை தேர்தலில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதைதொடர்ந்து கடந்த மாதம் 16-ந் தேதி ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். கடந்த 1-ந் தேதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. தியாகராஜன் தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றார். அதைதொடர்ந்து 3-ந் தேதி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். 

நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த 8-ந் தேதி 4 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அமைச்சரவை பதவி ஏற்று நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையிலும் சபாநாயகர் தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது. ஆளும் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும், எதிர்க்கட்சி உறுப்பினர் எண்ணிக்கையும் சமமாக இருந்தது. 

எனவே சபாநாயகர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்று கருதப்பட்டது. இதனாலேயே சபாநாயகர் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதாக பேச்சு அடிப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் வருகிற 29-ந் தேதி(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனுவை வருகிற 28-ந் தேதி பகல் 12 மணிவரை தாக்கல் செய்யலாம். 

சபாநாயகர் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார். சபாநாயகர் தேர்தலுக்கு பிறகு அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்படும். மீதம் உள்ள ஒரு அமைச்சர் பதவி விரைவில் நிரப்பப்படும். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. 

இதனாலேயே சோனியாகாந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மேலும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்தேன். மத்திய உள்துறை அமைச்சரிடம் புதுவை மாநிலத்துக்கான கடன் தொகை ரூ.4040.57 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். 

கடன் தொகையால் ஆண்டுக்கு ரூ.400 கோடி மத்திய அரசுக்கு வட்டியாக செலுத்த வேண்டியது உள்ளது. மேலும் திட்ட ஒதுக்கீட்டில் மத்திய அரசு வழங்கும் கடன் தொகையே அதிகமாக உள்ளது. இதனை மானியமாக மாற்றி வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். அண்டை மாநிலமான தமிழகத்துடன் சிறப்பான ஒத்துழைப்பே உள்ளது. புதுவையில் மணல் அள்ளுவதற்கு 2 அல்லது 3 இடங்களை தேர்வு செய்துள்ளோம். இங்கிருந்து பாப்ஸ்கோ, பாசிக் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மணல் வினியோகம் செய்யப்படும். ஜல்லி தட்டுப்பாட்டை போக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக முதல்வர் ரங்கசாமி, கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்து பேசினார். அதன் பின்னரே சபாநாயகர் தேர்தல் தேதியை அறிவித்தார். புதுவை சட்டசபையில் கட்சிகளின் பலம் வருமாறு:

என்.ஆர்.காங்கிரஸ்-14,

காங்கிரஸ்-7,

அ.தி.மு.க.-5,

தி.மு.க.-2,

சுயேட்சை-1, 

காலியிடம்-1.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago