Idhayam Matrimony

இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறும்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், ஜூன்.27 - தமிழகம் விரைவிலேயே இந்தியாவின் முன்னோடி மாநிலமாக உருவாகும் என்று காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பேசினார்.

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி சுதேசி அறிவியல் இயக்கம் சார்பில் தமிழக அறிவியல் பேரவையின் 11வது கருத்தரங்க தொடக்கவிழா பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சோம ராமசாமி தலைமை வகித்தார். காரைக்குடி சுதேசி அறிவியல் இயக்கத் தலைமைப் புரவலர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வாழ்ததுரை வழங்கினார். முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கருத்தரங்க ஆய்வுக்கோவையை வெளியிட்டு தொடக்கவுரையாற்றி பேசுகையில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சார்ந்து வாழ்வதால் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி கிராமப்புற வளங்களை மையமாகக் கொண்டே இருக்கிறது. இதுவே வளமான இந்தியா 2020ன் முக்கிய அம்சமாகும். எனவே கிராமப்புறங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் முதலில் அதற்குத் தேவையான அனைத்து விதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய பணிகளை புரா எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மையமாகக் கொண்டு அதன் பயன்பாட்டை வைத்து கிராமப்புறங்களுக்கு ஒரு நீடித்த வளர்ச்சியை கொண்டு செல்கிறது. தமிழக அரசு புரா திட்டத்தை மாநிலம் முழுமைக்கு நிறைவேற்ற முடிவு செய்திருப்பது இந்தியாவிற்கு முன் உதாரணமாக திகழும். இந்த முடிவு கிராமப்புறத்தை மட்டுமின்றி அனைத்து கல்வி மற்றும், ஆராய்ச்சித் துறைகளையும், இளைஞர்களையும் ஒருங்கிணைத்து ஒரு சமூக பொருளாதார மற்றும் அறிவியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் கெளசல்யாதேவி மற்றும் ஆராய்ச்சியாளர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்