முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில ஹாக்கி போட்டியில் மதுரை - சேலம் சாம்பியன்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன், 27 - சென்னையில் நடைபெற்ற மாநில ஹாக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் மதுரை அணியும், பெண்கள் பிரிவில் சேலம் அணியும் சாம்பியன் பட்டங்களை வென்றன. விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி பரிசுகளை வழங்கினார்.

எஸ்.டி.ஏ.டி. எனப்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநில ஹாக்கி போட்டி நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதிலும் இருந்து ஆண்கள் பிரிவில் 31 அணிகளும், பெண்கள் பிரிவில் 27 அணிகளும் கலந்துகொண்டன.

எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இதன் ஆண்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் மதுரை அணியும், திண்டுக்கல் அணியும் மோதின. பரபரப்பான இந்த இறுதி ஆட்டத்தில் மதுரை அணி 6-0 என்ற கோல்களில் திண்டுக்கல்லை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

அதே போல் பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியிலும் மதுரை அணியும், சேலம் அணியும் மோதின. இதில் சேலம் வீராங்கனைகள் அபாரமாக விளையாடி 1-0 என்ற கோலில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.

போட்டிகளின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் என். ஆர்.சிவபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவுக்கு எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலர் சத்யபிரதாசாகு தலைமை தாங்கினார். ஹாக்கி ஒலிம்பியன் வி.பாஸ்கரன், எஸ்.டி.ஏ.டி. பொது மேலாளர் மேரி ராஜாத்தி, துணை பொது மேலாளர் சுந்தரம், ஹாக்கி ஸ்டேடிய அதிகாரி கோபிநாதன் உள்பட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்