முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் தென்னரசு வெற்றி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு

புதன்கிழமை, 29 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.29 - திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்கம் தென்னரசு பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றிருக்கிறார். அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பாக பொதுச் செயலாளரும் திருச்சுழி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ச.இசக்கிமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பாக இரட்டை இலை சின்னத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் ச.இசக்கிமுத்துவாகிய நான் போட்டியிட்டேன்.

தேர்தல் ஆணையத்தில் செலவு கணக்கு தாக்கல் செய்துள்ள தங்கம் தென்னரசு பொய்யான கணக்கு தாக்கல் செய்துள்ளார். திருச்சுழி தொகுதியில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு இலவச டி-சர்ட் வழங்கினார். இதுபோல டி-சர்ட் வழங்கிய வாகனத்தையும், நூற்றுக்கணக்கான டி-சர்ட்களையும் பறிமுதல் செய்து காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி வாக்காளர்களுக்கு என பல கிராமங்களில் டோக்கன் கொடுத்து பணம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த டோக்கன்களை பறிமுதல் செய்து, பணம் கொடுத்தவர்களை பிடித்து கொடுத்தும் பணம் பறிமுதல் செய்து தங்கம் தென்னரசு சொந்த ஊரான மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நகல்கள் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான வீடியோக்களையும் வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்ய உள்ளோம்.

வாக்குப்பதிவுக்கு முதல் நாள் அன்று தங்கம் தென்னரசுவுக்கு ஆதரவாக வாக்குச்சாவடியில் அலுவலர்களாக பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் செயல்படுவதாக ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தோம். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வகையில் மட்டும் தங்கம் தென்னரசு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். இது தேர்தல் ஆணைய விதிகளை மீறிய செயலாகும். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து பெற்ற வெற்றியை செல்லாது என உயர்நீதிமன்றம் வெகு விரைவாக அறிவிக்க வேண்டும் என்று ச.இசக்கிமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்