முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவம் - பி.ஈ. படிப்புகளுக்கு கவுன்சிலிங் இன்று துவக்கம்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன், 30 - எம்.பி.பி.எஸ்., பி.டிஎஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கும், பி.ஈ., பி.டெக் உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விளையாட்டு கோட்டாவுக்கும் இன்று கவுன்சிலிங் துவங்குகிறது. தமிழகம் முழுவதிலும் பல லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை முடித்துவிட்டு உயர்கல்வியான மருத்தவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக காத்திருக்கிறார்கள். இந்த படிப்புகளுக்கான சேர்க்கை பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில் இப்போது கவுன்சிலிங் பணிகள் துவங்குகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கவுன்சிலிங் இன்று (30ம் தேதி) துவங்குகிறது. விளையாட்டு வீரர்கள்(3 இடம்), மாற்றுத்திறனாளிகள்(66 இடம்), முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்(15 இடம்) ஆகிய சிறப்பு பிரிவினருக்கு இன்று கவுன்சிலிங் நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து நாளை (1ம் தேதி) முதல் 6ம் தேதி வரை அனைத்து பிரிவினருக்குமான பொது கவுன்சிலிங் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இன வாரியாக நடத்தப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1653 இடங்களும், தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் அரசுக்கு ஒப்படைக்கும் 767 அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். இந்த கவுன்சில்ங் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி(கே.எம்.சி.) வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது.

பி.ஈ. மற்றும் பி.டெக்  உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான கவுன்சிலிங்கும் இன்று (30ம் தேதி) துவங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இதில் முதல் நாளில் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. 100 இடங்களுக்கு 350 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இதனடிப்படையில் இன்று கவுன்சிலிங் நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து நாளை முதல்(1ம் தேதி) 6ம் தேதி வரை பிளஸ் 2 தொழில் கல்வி படித்துவிட்டு, என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. 7ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், 8ம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங்கும் நடக்கிறது. 

மொத்தம் 35 நாட்கள் நடைபெறும் முதல்கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க வரும் மாணவ-மாணவிகளுக்கு பேருந்து கட்டண சலுகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்