திருவனந்தபுரம்,ஜூன்.30 - கேரளாவில் காசர்கோடு மாவட்டம் இயற்கை விவசாய மாவட்டமாக மாநில அரசு அறிவித்துள்ளது. விவசாயத்தில் உற்பத்தியை பெருக்க தற்போது ரசாயண உரங்கள் மற்றும் கெமிக்கல் கலந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மண்ணின் வளமும் தன்மையையும் மாறி விடுகிறது. மேலும் மனிதர்கள் உடல்நலத்திற்கு கேடும் விளைவிக்கிறது.
கேரளாவின் வடக்குப்பகுதியில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் முந்திரி விவசாயத்தில் எண்டோசல்பான் பூச்சி கொல்லி மருந்தை தெளித்ததில் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கேரள அரசு தலா ரூ. ஒரு லட்சம் வரை நிதியுதவி செய்துள்ளது. இந்தநிலையில் காசர்கோடு மாவட்டம் இயற்கை விவசாய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாநில சட்டசபையில் நேற்று அறிவிக்கப்பட்டது.
கேரள சட்டசபையில் நேற்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் என்.எ. நெல்லிக்குன்னு என்பவரின் கேள்விக்கு விவசாயத்துறை அமைச்சர் கே.பி. மோகனன் பதில் அளித்து கூறியதாவது:-
காசர்கோடு மாவட்டம் இயற்கை விவசாய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எண்டோல்சல்பான் மருந்தால் உயரிழந்தவர்களுக்கு கூடுதல் நிவராணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எண்டோசல்பான் மருந்து பயன்படுத்தப்படாமல் பார்த்துக்கொள்ளப்படும். காசர்கோடு மாவட்டத்தில் மண்பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எண்டோசல்பானின் பாதிப்பு முடிவுக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. எண்டோல்சல்பான் மருந்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். உயிரிழந்தோர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மோகனன் கூறினார்.