முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் 18 புதிய ரயில்கள்: தென்னக ரயில்வே

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - இன்று முதல் 18 புதிய ரயில்கள் படிப்படியாக இயக்கப்படுகின்றன. இதில் மதுரை - சென்னைக்கு நான்ஸ்டாப் ரயில் இயக்கப்படுகிறது. வாரம் இருமுறை இயக்கப்பட்ட சென்னை - திருச்செந்தூர் ரயில் தினசரி ஓடும். 

இது குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுகிறது. இது வாரம் இருமுறை இயக்கப்படும். இடையில் எந்த இடத்திலும் நிற்காது. அதே போல் சென்னை - திருவனந்தபுரத்திற்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட துரந்தோ எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை இயக்கப்படும். இந்த ரயிலும் நான்ஸ்டாப் ரயிலாகும். அதே போல கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு திப்ருகார் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது. இது கோட்டயம், கோயம்புத்தூர், காட்பாடி ஆகிய வழிகளில் செல்லும். இது வாரம் ஒருமுறை இயக்கப்படும். 

இந்த மூன்று ரயில்களும் அறிமுகப்படுத்தக் கூடிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். சென்னையில் இருந்து சீரடிக்கு அதிவேக ரயில் இயக்கப்படவுள்ளது. இதுவும் வாரம் ஒரு முறை இயக்கப்படும். அதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு அதிவேக ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படும். பாண்டிச்சேரியில் இருந்து புதுடெல்லிக்கு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் தோறும் விடப்படும். முதல் ரயில் இம்மாதம் 3 ம் தேதி டெல்லியில் புறப்படும். மொத்தம் 18 ரயில்கள் விடப்படுகின்றன. இவை படிப்படியாக விடப்படும். 

தென்னக ரயில்வேயில் 220 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மின்சார ரயில் 700 முறை இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 69 கோடி பேர் ரயிலில் பயணம் செய்தனர். நடப்பாண்டில் 73 கோடியே 77 லட்சம் பயணிகள் பயணம் செய்யவுள்ளனர். கடந்த ஆண்டு ரூ. 2 ஆயிரத்து 49 கோடி தென்னக ரயில்வேயில் வருவாயாக கிடைத்துள்ளது. தென்னக ரயில்வேயில் 2 ஆயிரத்து 230 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அது தற்போது ஆயிரத்து 651 சிறப்பு ரயில்களாக குறைக்கப்பட்டுள்ளது. காரணம், மற்ற ரயில்கள் நிரந்தர ரயில்களாக மாற்றப்பட்டு விட்டன. 

பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. ஆயிரத்து 700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கரப்பான்பூச்சி போன்றவைகளால் பயணிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அவை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரி செய்யப்பட வழிவகை செய்யப்படும் என்றார். 

மேலும் அவர் கூறுகையில், செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக அறிவிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் கூடுதல் ரயில் பெட்டிகள் தயார் செய்த பிறகு அது தினசரி செல்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். சில தொழில்நுட்ப காரணங்களால் வேளச்சேரி, பழவந்தாங்கல் ரயில் பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் வேலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரயில்வே கொடுக்கும் தொகை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். அவற்றை சீர் செய்ய மாநில அரசின் உதவியையும் ரயில்வே துறை கோரியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்