முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் பல தாக்குதல்கள் நடத்தப்படும்: தலிபான்கள்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜுலை 1 - ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க பாகிஸ்தானில் மேலும் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தப்போவதாக தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் செயல்படுகின்றன. தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. அமெரிக்கா பல காலம் தேடிய அல் கொய்தா இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன் கூட பாகிஸ்தானில்தான் பல காலமாக நிம்மதியாக வாழ்ந்துவந்தான். அவனை அமெரிக்க அதிரடிப்படையினர் கடந்த மே 2 ம் தேதி பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடியாக கொன்றபிறகுதான் ஒசாமா பல காலம் பாகிஸ்தானில் இருந்தது வெளியுலகிற்கு தெரியவந்தது. 

இந்த நிலையில் ஒசாமாவின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தானில் சில இடங்களில் தற்போது தாக்குதல்களை தலிபான்கள் துவங்கியுள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் பாகிஸ்தான் முழுவதும் மேலும் பல இடங்களில் நடத்தப்படும் என்று தலிபான் தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான தெஹ்ரிக் இ தலிபான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவன் விடுத்துள்ள செய்தியில், பாகிஸ்தானில் 10 இடங்களை தாக்க தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இதில் முதல் இடமாகத்தான் மெஹ்ரான் கடற்படைத் தளத்தை தாக்கியதாகவும் தெரிவித்தான். 

கடந்த மாதம் கராச்சியில் உள்ள மெஹ்ரான் கடற்படைத் தளத்தை தாக்கிய தலிபான்கள் அங்கிருந்த இரண்டு உளவு விமானங்களை சுட்டு வீழ்த்தியதோடு, 10 க்கும் மேற்பட்ட வீரர்களையும் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மெஹ்ரான் குறிப்பிட்டுள்ள மேலும் 9 இடங்களும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களே என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதை கண்டித்தே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் ரெஹ்மான் தெரிவித்தான். பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக இன்னும் 8 ஆண்டுகள் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்த ரெஹ்மான், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேலை நாடுகளையும் தாக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளான். 

ரெஹ்மானின் தலைக்கு அமெரிக்கா 27 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தலிபான்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலேயே தங்கள் கைவரிசையை அதிகம் காட்டி வருகிறார்கள். அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் தாக்குதல் நடத்த முயன்ற தலிபான்களின் திட்டம் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்