முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - சென்னையில் 30 நாட்களில் ரூ.1 கோடி மதிப்புள்ள 600 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது என்றும் 83 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கமிஷனர் திரிபாதி கூறினார். இதுபற்றி நிருபர்களுக்கு கமிஷனர் திரிபாதி அளித்த பேட்டி வருமாறு:​

கேள்வி:​ நில அபகரிப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சென்னையில் அதுபோன்று புகார் ஏதும் வந்துள்ளதா? யாரும் கைது செய்யப்பட்டு உள்ளார்களா?

பதில்:​ நில அபகரிப்பு மற்றும் நில மோசடி தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவில் தனியாக ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். நில அபகரிப்பு தொடர்பாக யாராவது புகார் கொடுத்தால் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  கே:​ சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது அவ்வப்போது மட்டும் போலீசார் நடவடிக்கை எடுக்கிறீர்களே, பொதுமக்கள் ஹெல்மெட் அணிய வேண்டுமா? வேண்டாமா?

ப:​ ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் பலர் அவர்களது பாதுகாப்பு கருதி ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர். அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோரை நிறுத்தி போலீசார் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.  

கே:​ சென்னையில் ஆட்டோ கட்டணம் நெறிமுறைப்படுத்தப்படுமா? இஷ்டத்துக்கு ஆட்டோ டிரைவர்கள் கட்டணம் வசூலிக்கிறார்களே?

ப:​ இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.  

கே:​ சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறதே? விமானத்தில் பறந்து வந்து வட மாநில கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபடும் நிலை உள்ளதே?

ப:​ செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். செயின் பறிப்பு கொள்ளையர்களின் தோற்றம், அவர்களின் மோட்டார் சைக்கிள் எண் ஆகியவற்றை குறித்துக் கொடுத்தால் போலீசாருக்கு பயனுள்ளதாக இருக்கும். கடந்த 1 1/2  மாதத்தில் பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்ட 60 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். செயின் பறிப்பு சம்பவத்தை தடுக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும்.  

கே:​ ஐ.பி.எல். கிரிக்கெட் ஊழல் தொடர்பாக லலித் மோடி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது போல் உள்ளதே?

ப:​ எல்லா வழக்குகளையும் விசாரிப்பதுபோல் இந்த வழக்கையும் விசாரித்து வருகிறோம். தற்போதுதான் மத்திய குற்றப்பிரிவில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். லலித்மோடி மீது கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  சென்னை நகரில் கடந்த 1 மாதத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 600 சவரன் திருட்டு தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி நகைகள் 2 கார், 4 ஆட்டோ, 6 மோட்டார் சைக்கிள், 10 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 83 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தற்போது நடைபெறும் செயின் பறிப்பு சம்பவத்தில் புதிய குற்றவாளிகள் ஈடுபடு கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் பள்ளி​கல்லூரி மாணவர்களும் உள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்