முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 1 -இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தருவதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அக்கறையுடன் செயல்படுகிறார் என்று பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இவர்களுக்காக போராட்டம் நடத்திய, அதாவது தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப் புலிகளையும் ராஜபக்ஷே அரசு, போர் என்ற பெயரில் ஒழித்துக்கட்டிவிட்டது. புலிகளை ஒழித்ததோடு நில்லாமல் இலங்கை தமிழர்களையும் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்துவருகிறது ராஜபக்ஷே அரசு. பல தமிழர்கள் போர் விதிமுறைகளை மீறி அரக்கத்தனமான முறையில் கொல்லப்பட்டார்கள். இந்த தகவலை ஐ.நா. சபையே அம்பலப்படுத்தி இருக்கிறது. ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உலக அளவில் வலுத்து வருகிறது. ஆனால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு மட்டும் இதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. 

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஈழத் தமிழர் பிரச்சனையில் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அக்கறையுடன் செயல்படுவதாக மனந்திறந்து பாராட்டியுள்ளார். கடந்த 14 ம் தேதியன்று டெல்லியில் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை மற்றும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை ஆகியவை குறித்து பிரதமருடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இதுபற்றி குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன்சிங், இலங்கைத் தமிழர் பிரச்சனையை ஜெயலலிதா நன்கு அறிந்தவர் என்று குறிப்பிட்டார். அதனால்தான் அவர் இந்த பிரச்சனையில் அக்கறையுடன் செயல்படுவதாகவும் பிரதமர் பாராட்டினார். மேலும் மத்திய அரசுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் பிரதமர் பாராட்டினார். 

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 23 தமிழக மீனவர்களும் நேற்று ராமேஸ்வரம் திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாயகம் திரும்பிய மீனவர்கள் அனைவரும் தங்களை மீட்க உதவிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இலங்கைச் சிறையில் தாங்கள் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு ஆளானதாகவும் சில மீனவர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். இதுபற்றி மீனவர்கள் குடும்பத்தினர் தெரிவித்தபோது இதுவரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள் இவ்வளவு சீக்கிரம் தாயகம் திரும்பியதே இல்லை என்றும், கைது செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் தங்களை சிறையில் இருந்து மீட்க பெருமுயற்சி எடுத்த தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்