முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது

புதன்கிழமை, 29 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு, ஜுன் 29 - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமர்நாத் யாத்திரை நேற்று துவங்கியது. முதல்கட்டமாக 2,096 பக்தர்கள் ஜம்மு அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு புறப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் இமயமலைப் பகுதியில் 13,500 மீட்டர் உயரத்தில் அமர்நாத் பனிலிங்க கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்டக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நேற்று காலை ஜம்மு அடிவாரத்தில் இருந்து தொடங்கியது. அப்போது 2,096 பக்தர்கள் முதல் அணியாக அமர்நாத் குகைக் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே ஒருமுறை அமர்நாத் கோவில் பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 30 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துவிடாமல் இருக்க ஜம்முவில் இருந்து அமர்நாத் வரைசெல்லும் பாதையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மத்திய ரிசர்வ்  போலீஸ் படையினர் இந்த பாதையில் 24 மணிநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று அமர்நாத் பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற 73 வாகனங்களின் பயணத்தை காஷ்மீர் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் நவாங் ரிக்ஜின் ஜோரா கொடியசைத்து துவக்கிவைத்தார். யாத்திரை புறப்பட்டு சென்றபோது யாத்ரீகர்கள் சிவனைப் போற்றி கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். இந்த முதல் அணியில் 1369 ஆண்களும், 423 பெண்களும் 110 குழந்தைகளும் 196 சாதுக்களும்  இடம்பெற்றுள்ளனர்.  இவர்கள் 49 பஸ்களிலும், 24 சிறு வாகனங்களிலும் சென்றனர். 

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் எந்த பயமும் இல்லாமல் யாத்திரையை தொடரலாம் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோரா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்